அணியிலிருந்து ஓரங்கட்டப்படும் முகமது ஷமி; ரசிகர்கள் அதிர்ச்சி!
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ள ஆசியக்கோப்பை தொடர் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதனை தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவிருக்கிறது.
இந்த தொடர்களுக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணிகளில் பிசிசிஐ தேர்வுக்குழு மற்றும் பயிற்சியாளர் டிராவிட் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதில் பேட்டிங் வரிசை ஓரளவிற்கு உறுதியான சூழலில் பந்துவீச்சில் தான் குழப்பம் நிலவி வருகிறது. ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோருடன் ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் போட்டியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சீனியர் வீரர் முகமது ஷமி முற்றிலும் டி20 அணியில் இருந்து நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது. கடந்தாண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடிய அவருக்கு அதன்பின்னர் ஒருபோட்டியில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக சிறப்பாக விளையாடிய போதும், இளம் வீரர்களின் வருகையால் அவர் ஒதுக்கப்பட்டார்.
இந்நிலையில் முகமது ஷமியிடமே இனி டி20ல் வாய்ப்பில்லை எனக்கூறிவிட்டதாக பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், முகமது ஷமிக்கு 31 வயதாகவிட்டதால், இனிமேல் அவரை டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிற்கு மட்டும் பயன்படுத்தவுள்ளோம். அவரின் பனிச்சுமையையும் கருத்தில் கொண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கும் அவரை மனதில் கூட நாங்கள் வைத்திருக்கவில்லை எனக்கூறியுள்ளார்.
முகமது ஷமி மட்டுமல்லாமல், மேலும் சில சீனியர் வீரர்களும் அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். ஷிகர் தவான், அஜிங்கியா ரகானே, உமேஷ் யாதவ் போன்றோரும் இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் அணியில் இருந்து ஒதுக்கப்பட்டு வருகின்றனர். இதில் ஷிகர் தவானுக்கு மட்டும் அவ்வபோது வாய்ப்பு தரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.