காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் முகமது ஷமி!

Updated: Thu, Feb 22 2024 15:09 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இத்தொடருக்கான போட்டி அட்டவணையும் இன்றைய தினம் அறிவிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச்செய்துள்ளது. அதன்படி இத்தொடரானது மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் என்றும், முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் தகவல்கள் வந்துள்ளன.

மேலும் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து, ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்களது பயிற்சிகளை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளனர். 

இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது காயமடைந்த முகமது ஷமி, அதன்பின் நடைபெற்ற ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான் மற்றும் தற்போது நடைபெற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர்களிலிருந்து விலகினார். 

இருப்பினும் அவர் ஐபிஎல் தொடருக்கு முன் முழு உடற்தகுதியை எட்டி கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள்  பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் தான் தனது இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக முகமது ஷமி இங்கிலாந்து சென்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால் நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து விலகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

 

ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் முகமது ஷமி கடந்த இரு சீசன்களிலும் அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஐபிஎல் தொடரில் இதுவரை 110 போட்டிகளில் விளையாடியுள்ள முகமது ஷமி 127 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போது முகமது ஷமியின் விலகல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை