கேப்டன்சியிலிருந்து விலகிய வங்கதேச வீரர்!

Updated: Tue, May 31 2022 21:55 IST
Image Source: Google

கடந்த 2019 முதல் வங்கதேச டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக மோமினுல் ஹக் இருந்து வருகிறார். இந்தாண்டு தொடக்கத்தில் நியூசிலாந்துக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் வெற்றியை மோமினுல் ஹக் தலைமையிலான வங்கதேசம் பெற்றது. 

ஆனால், அடுத்து நடைபெற்ற 5 டெஸ்ட் ஆட்டங்களில் 4இல் தோல்வியைச் சந்தித்தது. தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை வங்கதேசம் இழந்தது. 

அதிலும் சமீபத்தில் இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 0-1 என்ற கணக்கில் இழந்தது. இந்த நிலையில், கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக மோமினுல் ஹக் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய மொமினுல் ஹக், "நன்றாக விளையாடும்போது அணி வெற்றி பெறாவிட்டாலும், அணிக்கு உத்வேகம் அளிக்கும் இடத்தில் நாம் இருப்போம். நான் நன்றாக விளையாடாமல் இருக்கும்போதும், அணி வெற்றி பெறாதபோதும் அதை வழிநடத்துவது கடினமானது. எனவே, கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவது சிறந்தது.

எனது பேட்டிங்கில் நான் கவனம் செலுத்த வேண்டும். இது கடினமான முடிவல்ல. கேப்டன் பங்களிப்பைச் செலுத்த வேண்டும், இல்லையெனில் அது நிறைய அழுத்தங்களைக் கொடுக்கும். வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் என்னை ராஜிநாமா செய்ய வேண்டாம் எனத் தெரிவித்தார். ஆனால், கேப்டனாக இருக்க நான் விரும்பவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

2022இல் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மொமினுல் ஹக் பேட்டிங் சராசரி 16.20 உடன் 162 ரன்கள் எடுத்துள்ளார். மோமினுல் ஹக் தலைமையில் வங்கதேச அணி 3 டெஸ்ட் ஆட்டங்களில் வென்றுள்ளது. 12-இல் தோல்வியைச் சந்தித்துள்ளது, 2 ஆட்டங்களை டிரா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை