ENG vs PAK : மோர்கன் தலைமையில் களமிறங்கும் இங்கிலாந்து படை!
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் இலங்கை தொடர் முடிந்த இங்கிலாந்து அணி வீரர்கள் உள்பட 7 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடியது.
இத்தொடரின் முடிவில் இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி பாகிஸ்தான் அணியை ஒயிட்வாஷ் செய்தது.
இந்நிலையில் கரோனா அச்சத்தால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஈயன் மோர்கன் தலைமையிலான அனுபவம் வாய்ந்த இங்கிலாந்து அணி மீண்டும் களமிறங்க தயாராகியுள்ளது. அதற்கேற்றார் போல் பாகிஸ்தான் அணியுடனான டி20 தொடருக்கு ஈயன் மோர்கன் தலைமையிலான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
இதில் பென் ஸ்டோக்ஸ், சாம் கரண், மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் விளையாடிய சாகிப் மஹ்மூத், மேத்யூ பர்கின்சன், லீவிஸ் கிரிகோரி ஆகியோருக்கு இங்கிலாந்து டி20 அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து டி20 அணி:
ஈயன் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ், ஜேக் பால், டாம் பான்டன், ஜோஸ் பட்லர், டாம் கரண், லூயிஸ் கிரிகோரி, கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டன், சாகிப் மஹ்மூத், டேவிட் மாலன், மாட் பார்கின்சன், ஆதில் ரஷீத், ஜேசன் ராய் , டேவிட் வில்லி.
தொடர் அட்டவணை
- ஜூலை 16: இங்கிலாந்து vs பாகிஸ்தான், முதல் டி 20, ட்ரெண்ட் பிரிட்ஜ், நாட்டிங்ஹாம்
- ஜூலை 18: இங்கிலாந்து vs பாகிஸ்தான், 2 வது டி 20, ஹெடிங்லி, லீட்ஸ்
- ஜூலை 20: இங்கிலாந்து vs பாகிஸ்தான், 3 வது டி 20, ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர்