ஐபிஎல் தொடர் வரலாற்றில் புதிய சாதனை நிகழ்த்தவுள்ள எம்எஸ் தோனி! 

Updated: Sun, May 28 2023 14:59 IST
MS Dhoni Is Set To Reach New MILESTONE In IPL 2023 Final! (Image Source: Google)

16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 31ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியது. 2 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்ற லீக் போட்டிகளுக்கு பின், பிளே ஆப் சுற்றுக்கு குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை அணிகள் முன்னேறின. இதில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் தோல்வியடைந்து வெளியேற, இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டிக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் சென்னை அணி 10ஆவது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளது. இதனால் 5ஆவது முறையாக நிச்சயம் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் குஜராத் அணிக்கு எதிரான இன்றைய இறுதிப்போட்டியில் களமிறங்குவதன் மூலம், சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி 250ஆவது ஐபிஎல் போட்டியில் களமிறங்கவுள்ளார். ஐபிஎல் தொடரில் 250 போட்டிகளில் விளையாடியுள்ள முதல் வீரர் என்ற சாதனையையும் தோனி படைக்கவுள்ளார்.

அதேபோல் 11 ஐபிஎல் இறுதிப்போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையையும் தோனி படைக்கவுள்ளார். சென்னை அணியின் கேப்டனாக 10வது இறுதிப்போட்டியில் களமிறங்கப் போகும் தோனி, ஏற்கனவே புனே அணியின் வீரராக ஒரு ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளார். இதனால் எம்எஸ் தோனியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இவருக்கு பின் ரோகித் சர்மா 243 போட்டிகளிலும், விராட் கோலி 237 போட்டிகளில் விளையாடியுள்ளனர்.

ஏற்கனவே சென்னை அணி கேப்டன் தோனிக்கு கடைசி ஐபிஎல் சீசன் என்று பார்க்கப்பட்டு வரும் சூழலில், ஒவ்வொரு போட்டியிலும் ஏராளமான சாதனைகளை தோனி படைத்து வருகிறார். இதனால் தனது கடைசி ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு கோப்பையை வென்று கொடுத்து, அதிக கோப்பையை வென்ற மும்பை அணியின் சாதனையை தோனி சமன் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை