இந்தியாவிற்கு கிடைத்த மிகவும் வெற்றிகரமான கேப்டன் - தோனியை பாராட்டிய கம்பீர்!

Updated: Mon, Apr 08 2024 15:37 IST
இந்தியாவிற்கு கிடைத்த மிகவும் வெற்றிகரமான கேப்டன் - தோனியை பாராட்டிய கம்பீர்! (Image Source: Google)

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. 

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தங்களது சொந்த மைதானத்தில் விளையாடிய இரண்டு போட்டிகளைத் தவிர மற்ற இரண்டு போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது. அதேசமயம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பு சீசனில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று தங்களது வெற்றி கணக்கைத் தொடரும் வகையில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. 

இதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டுவரும் கௌதம் கம்பீர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்து பேசியுள்ள கருத்து தற்போது ரசிகர்களை அச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

அதன்படி தோனி குறித்து பேசிய கௌதம் கம்பீர், “இத்தொடரின் அனைத்து போட்டியிலும் வெற்றிபெற வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். அதேசமயம் இப்போட்டியில் நண்பர்கள், பரஸ்பர மரியாதை என எல்லாம் நிலைத்து நிற்கும். ஆனால், ஆனால் நான் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்தேன். தோனி சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்தார். எனவே நீங்கள் அவரிடம் கேட்டாலும் இதே பதிலைத் தான் சொல்லுவார். 

மகேந்திர சிங் தோனி குறித்து வெளிப்படையாக கூறவேண்டும் எனில் இந்தியாவிற்கு கிடைத்த மிகவும் வெற்றிகரமான கேப்டன் அவர் தான். குறிப்பாக ஐசிசியின் மூன்று கோப்பைகளையும் வென்று அவரது இடத்தை மற்றொருவர் பிடிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. எனவே ஐபிஎல் தொடரில் தோனிக்கு எதிராக விளையாடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

 

மேலும் அவர் பேட்டிங் செய்யும் வரை போட்டியை ஃபினிஷிங் செய்து கொடுப்பார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஒருவேளை கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டாலும் தோனி களத்தில் இருந்தால் நிச்சயம் அப்போட்டியை அவர் வென்றுவிடுவார். அதே சமயம் சிஎஸ்கே அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரரையும் அட்டாக் செய்வதற்கான பந்துவீச்சு யுக்திகள் என்னிடம் உள்ளதை நான் அறிவேன்.

களத்தில் ஆக்ரோஷமாக இல்லாவிட்டாலும் சாமர்த்தியமாக செயல்படக்கூடிய தோனியை விடவும் நீங்கள் சிறந்தவராக இருக்க முயற்சி செய்ய வேண்டும். அவர் எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டார். சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்த்து கடைசி பந்து வீசப்படும் வரை நீங்கள் வெற்றி பெறவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். ஏனெனில் அது அப்படிப்பட்ட ஒரு அணி” என்று தெரிவித்துள்ளார். இவரது கருத்துகள் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை