சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யார்? - கிறிஸ் கெயிலின் பதில்!

Updated: Mon, Dec 26 2022 12:19 IST
Image Source: Google

2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தை சென்னை அணி வெற்றிகரமாக முடித்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் பென் ஸ்டோக்ஸ், கெயில் ஜேமிசன் போன்றோரை வாங்கி அசத்தியது. அடுத்த ஆண்டு சென்னை அணிக்கு மிகவும் சிறப்பான சீசனாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கேப்டன் எம்.எஸ்.தோனி விளையாடப்போகும் கடைசி சீசனாக அது இருக்கலாம்.

தோனிக்கு பிறகு சென்னை அணியை வழிநடத்தப்போவது யார் என்ற கேள்வி கடந்த 2 - 3 ஆண்டுகளாக இருந்து வருகிறது. அவரின் இடத்தை ஜடேஜாவால் பூர்த்தி செய்ய முடியவில்லை. இப்படி இருக்கையில் தான் ஏலத்தில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடி கொடுத்து வாங்கினர். அதிக அனுபவம் கொண்ட அவர் அடுத்த கேப்டனாக செயல்படலாம் எனக்கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த கேள்விக்கு வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் சுவாரஸ்ய பதிலை கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “தோனி இருக்கும் வரை அவரே தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும். சிஸ்கேவின் ஓய்வறையில் தோனி, பென் ஸ்டோக்ஸ் என்ற இரு பெரும் கிரிக்கெட் தலைகள் உள்ளனர். என்னைப்பொறுத்தவரையில் பென் ஸ்டோக்ஸ் தோனிக்கு பின் அமர்ந்து அவரின் வழியில் செல்ல வேண்டும்” எனக்கூறியுள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர், “பென் ஸ்டோக்ஸ் சொல்லும் அறிவுரைகளை சிஎஸ்கேவில் இருக்கும் இளம் வீரர்கள் கேட்க வேண்டும். அவர்களின் இருவரின் தலைமையில் சிறப்பாக செல்லும். பென் ஸ்டோக்ஸின் அனுபவத்திற்கும், அவரின் செயல்பாட்டிற்கும், சிஎஸ்கேவின் கலாச்சாரத்தில் சரியாக பொருந்துவார் என நினைக்கிறேன்” என கிறிஸ் கெயில் கூறியுள்ளார்.

முன்னதாக அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், “சிஎஸ்கேவின் அடுத்த கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இல்லையென்று கூறவில்லை. ஆனால் தோனி தான் இதுகுறித்து இறுதி முடிவை எடுப்பார்” எனக்கூறியிருக்கிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை