ரசிகரிடம் வழி கேட்ட எம் எஸ் தோனி; இணையத்தில் வைரலாகும் காணொளி!
நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி இந்தியாவுக்காக ஐசிசியின் 3 விதமான கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சரித்திர சாதனை படைத்துள்ளார். அதே போல இந்திய விக்கெட் கீப்பர்கள் என்றால் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற இலக்கணம் உருவாகும் அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டு, மின்னல் வேகத்தில் விக்கெட் கீப்பிங் செய்து புதிய பரிணாமத்தை ஏற்படுத்திய அவர், நிறைய போட்டிகளில் அழுத்தமான மிடில் ஆர்டரில் நங்கூரமாக நின்று வரலாற்றின் மிகச்சிறந்த ஃபினிஷராகவும் போற்றப்படுகிறார்.
அதே போல தற்போதைய அணியில் இருக்கும் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற முக்கிய வீரர்களுக்கு அப்போதே சீனியர்களை கழற்றி விட்டு வாய்ப்பு கொடுத்து வளர்த்த அவர் இந்தியாவின் வருங்காலத்தை வளமாக கட்டமைத்த பெருமைக்குரியவர். அப்படி இந்திய கிரிக்கெட்டின் மகத்தான ஜாம்பவானாக போற்றப்படும் அவர் 2019இல் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அதில் கடந்த வருடம் 9ஆவது இடத்தை பிடித்த சென்னை இம்முறை அவரது தலைமையில் சிறப்பாக செயல்பட்டு 5ஆவது கோப்பையை வென்று வெற்றிகரமான அணி மும்பையின் ஆல் டைம் சாதனையும் சமன் செய்தது.
குறிப்பாக தம்மை விட வயது குறைந்த பல வீரர்கள் ஃபிட்னஸ் இல்லாமல் தடுமாறும் நிலைமையில் அத்தொடரில் 42 வயதிலும் முழங்கால் வலியுடன் விளையாடிய அவர் அனைத்து போட்டிகளிலும் மிகச் சிறப்பாகவே செயல்பட்டார். தற்போது முழங்கால் வலிக்கு சிகிச்சைகளை மேற்கொண்டு வரும் அவர் தன்னுடைய சொந்த ஊரான ராஞ்சியில் இருந்து வருகிறார். பொதுவாகவே களத்தில் வித்தியாசமான முடிவுகளை எடுக்கும் தோனி தம்முடைய வாழ்விலும் பல அம்சங்களில் மிகவும் தனித்துவமாகவே இருப்பது வழக்கமாகும்.
எடுத்துக்காட்டாக தற்போது பாலர் தாங்கள் சாப்பிட்டால் கூட அதை போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் போட்டு அலப்பறை செய்யும் நிலையில் பெரும்பாலும் கையில் போனை வைத்துக் கொள்ளாத தோனி சமூக வலைதளங்களிலிருந்து விலகியே இருந்து வருகிறார். ஆனால் அவர் செய்யும் சிறிய விஷயங்களை கூட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெரிதாக கொண்டாடித்திருப்பது வழக்கமாகும். அந்த வகையில் தன்னுடைய 42ஆவது பிறந்தநாளை மிகவும் எளிதாக தம்முடைய வீட்டில் வளரும் செல்லப்பிராணிகளுடன் அவர் கொண்டாடிய காணொளி வைரலானது.
அதை தொடர்ந்து கார் மற்றும் பைக் பிரியரான அவர் தம்முடைய வீட்டில் ஷோ ரூமை மிஞ்சும் அளவுக்கு ஏராளமான வாகனங்களை குவித்து வைத்திருந்த காணொளியை முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் வெளியிட்டது அனைவரிடமும் வியப்பை ஏற்படுத்தியது. அதே போல கடந்த சிலர் தினங்களாகவே பழைய மாடல் கார்களை எடுத்துக்கொண்டு ராஞ்சியில் அவர் வலம் அந்த காணொளிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகின. அந்த வரிசையில் தற்போது ராஞ்சியில் இருக்கும் ஒரு அடையாளம் தெரியாத ஊருக்கு செல்ல விரும்பிய தோனி அதற்காக செல்லும் வழியில் சாலை ஓரத்தில் இருந்த ரசிகர்களிடம் வழி கேட்ட காணொளி வைரலாகி வருகிறது.
பொதுவாகவே நம்மில் பலர் தெரியாத ஊருக்கு செல்லும் போது அங்கே இருப்பவர்களிடம் உதவியை கேட்காமல் கூகுள் மேப்ஸ் பயன்படுத்துவது வழக்கமாகும். ஆனால் பல சமயங்களில் அது தவறான பாதையை காண்பித்து சிக்கலான இடத்தில் கொண்டு போய் விடுவது சகஜமாகும். ஆனால் டெக்னாலஜி வளர்ந்த இந்த யுகத்திலும் கூகுள் மேப்ஸ் பயன்படுத்தாத தோனி தம்முடைய நண்பருடன் தெரியாத ஊருக்கு காரில் செல்லும் போது அதற்கான வழியை ரசிகர்களிடம் கேட்டார்.
அந்த அதிர்ஷ்டமான வாய்ப்பில் தோனிக்கு ஒன்றுக்கு 2 முறை சரியான வழியை ரசிகர்களும் சொன்னார்கள். இறுதியாக தமக்கு வழி சொன்ன ரசிகர்கள் ஃசெல்பி எடுப்பதற்கு கேட்ட போது புன்னகை முகத்துடன் போஸ் கொடுத்த தோனி இறுதியாக கை கொடுத்து விட்டு சென்றார்.