ஐபிஎல் தொடரில் அனைத்து போட்டிகளுமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது தான் - எம்எஸ் தோனி!
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது. மும்பையின் வான்கடேவில் 11 முறை விளையாடியுள்ள சி எஸ் கே தற்போது நான்காவது வெற்றியை பெற்றிருக்கிறது. இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட ரஹானே, தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்த நிலையில் சிஎஸ்கேவுக்கு வந்த பிறகு வீரர்கள் எப்படி சிறப்பாக செயல்படுகிறார்கள் என வர்ணனையாளர்கள் பாராட்டி பேசினர்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய தோனி, “மும்பைக்கு எதிரானது வெற்றி மகிழ்ச்சியை தருகிறது. ஏனென்றால் நாங்கள் தீபக் சஹாரை முதல் ஓவரிலேயே காயத்தால் இழந்து விட்டோம் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள். அவர்தான் எங்களது பவர் பிளேவில் பந்து வீசும் பவுலர். தென் ஆப்பிரிக்கா வீரர் சிசான்டா மஹாலா தன்னுடைய முதல் ஆட்டத்தில் விளையாடுகிறார். இதனால் யாருக்கு எந்த ஓவரை கொடுப்பது என்ற சவால் எனக்கு இருந்தது.
நல்ல வேலையாக சுழற் பந்துவீச்சாளர்கள் இன்று சிறப்பாக செயல்பட்டனர். ஏழு ஓவர்கள் கடந்த பிறகு ஆடுகளத்தின் பவுன்சில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டது. பந்து கொஞ்சம் திரும்பியது போல் தெரிந்தது. இதனால் நான் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பை கொடுத்தேன். எங்களுடைய பந்துவீச்சாளர்கள் முதலில் ரன்கள் கொடுத்தாலும், பிறகு ரன்களை கட்டுப்படுத்தி சிறப்பாக செயல்பட்டனர்.
சிசண்டா மகாலா,பிரிட்டோரியஸ் ஆகியோர் நன்றாக விளையாடினார்கள். தேஷ்பாண்டே மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம். அவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அனுபவம் அவருக்கு கை கொடுக்கும். நிச்சயம் அவருடைய பந்துவீச்சில் முன்னேற்றம் தெரிகிறது. ரோஹித் சர்மாவை அவர் ஆட்டம் இழக்க வைத்த விதமே அதற்கு ஒரு சான்றாக சொல்லலாம்.
நிச்சயம் அவரிடம் திறமை இருக்கிறது. இன்னும் நோபால்கள் எல்லாம் வீசாமல் தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும் என நான் நம்புகிறேன். சீசன் தொடங்குவதற்கு முன்பு நான் ரகானே உடன் பேசினேன். உன்னுடைய பேட்டிங் பலத்திற்கு ஏற்ப விளையாடு என்று நான் கூறினேன். உன்னுடைய திறமையை பயன்படுத்தி பில்டர்களை குழப்பப்படுத்தி ரன்களை சேரு என்று நான் கூறினேன்.
எந்த நெருக்கடியும் இல்லாமல் இந்த சீசனை மகிழ்ச்சியுடன் அணுக நான் கூறினேன். கொஞ்சம் கூட அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாதே. எப்போதும் நாங்கள் உன்னை ஆதரிப்போம் என்ற உறுதி அளித்தேன். இன்று அவர் சிறப்பாக விளையாடி எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து விட்டார். ஐபிஎல் தொடரில் அனைத்து போட்டிகளுமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது தான். உங்கள் கண் முன் என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை பார்த்து அதற்கு ஏற்ப ஒவ்வொரு அடியாக எடுத்து முன் வைக்க வேண்டுமே தவிர புள்ளிகள் பட்டியல் குறித்து யோசிக்க தேவையில்லை” என்று தோனி கூறினார்.