அவரு அப்படி பண்ணுவாருன்னு நீங்க எப்படி நினைக்கலாம் - தோனி குறித்த சர்ச்சைக்கு பதிலளித்த இளம் வீரர்!
கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்தாண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் யாரும் எதிர்பாராத வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் தொடர் வரலாற்றிலேயே முதல் முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் லீக் ஆட்டங்கள் உடனே வெளியேறியது.
ஆனால் மகேந்திர சிங் தோனி அந்த தொடரின் இறுதி கட்ட வேலையில் இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என்பதாலேயே அவர்களை நான் விளையாட வைக்காமல் இருந்து வருகிறேன் என்று கூறினார். எப்போதும் இளம் வீரர்களை ஊக்குவித்து அவர்களை சிறந்த வீரராக மாற்றும் குணமுடைய தோனியின் வாயிலிருந்து வந்த இப்படி ஒரு வார்த்தை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டுமின்றி சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
மேலும் தோனியின் இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் அவருக்கு எதிராக சில விமர்சனங்களும் பெற்றுக்கொடுத்தது. இளம் வீரர்களை விளையாட வைக்காமல் தோனி எவ்வாறு இப்படி பேசலாம் என்று நெட்டிசன்கள் பலரும் அவரை விமர்சித்து இருந்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தற்போது பேசியுள்ள தமிழ்நாடு வீரரான ஜெகதீசன் இந்த கூறுகையில், “சிஎஸ்கே அணியில் பல மூத்த வீரர்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒரு சிலர் ஒரு சில போட்டிகளில் சிறப்பாக விளையாட வில்லை என்றால் உடனடியாக அவர்களை அணியிலிருந்து தூக்கி விட முடியாது.
அவர்கள் ஒரு முறை தவறு செய்தால் அதனை திருத்திக் கொண்டு மீண்டும் சிறப்பாக விளையாடும் தன்மையுடையவர்கள். சிஎஸ்கே அணியின் மீது விமர்சனம் எழுந்த பிறகு சீனியர் வீரர்கள் சிறப்பாக தான் செயல்பட்டார்கள் . நாங்கள் இளம் வீரர்கள் என்கின்ற முறையில் அவர்களைப் பார்த்து அவர்களிடமிருந்து பல அனுபவங்களை கற்றுக் கொண்டு வருகிறோம். நெருக்கடியான நேரத்திலும் அவர்கள் எப்படி சமாளித்து விளையாடுகிறார்கள் என்பதை பார்த்து மனதளவில் தற்போது தயாராகி வருகிறோம்.
வாய்ப்பு கிடைக்கும் போது நாங்கள் இதனை செயல்படுத்தி விளையாட இந்த அனுபவங்கள் எல்லாம் எங்களுக்கு நிச்சயம் உதவும். தோனியின் திட்டமும் இதுதான். தோனியை பற்றி யோசிக்காமல் இப்படி பேசுவது தவறு. தோனியின் எண்ணமெல்லாம் அனுபவம் வீரர்களிடமிருந்து இளம் வீரர்கள் ஆட்டத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதானே தவிர வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்பதெல்லாம் இல்லை” என தெரிவித்துள்ளார்.