தோனி தாமதமாக பேட்டிங் இறங்குவது ஏன்? மைக் ஹஸ்ஸி பதில்!

Updated: Fri, May 19 2023 21:00 IST
Image Source: Google

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியது முதலே சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இருப்பினும், அவர் களமிறங்கிய போட்டிகளில் அனைத்திலும் அணியின் வெற்றிக்கு உதவும் வகையில் சிறப்பாக பேட் செய்துள்ளார்.

இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி கேப்டன் தோனி தாமதமாக பேட்டிங் செய்ய வருவதற்கு அவரது முழங்காலில் ஏற்பட்டுள்ள காயமே காரணம் என தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது குறித்து பேசிய அவர், “மகேந்திர சிங் தோனி ஆட்டத்தின் இறுதி ஓவர்களில் விளையாடுவதையே விரும்புவதாக நான் நினைக்கிறேன். அதுதான் அவருடைய திட்டமாக இருக்கும். அவரது முழங்கால் 100 சதவிகிதம் சரியாக இல்லை. ஒவ்வொரு போட்டியிலும் தன்னுடைய முழங்கால் காயத்துடன் அணிக்கு எந்த அளவில் சிறப்பான பங்களிப்பை வழங்க முடியுமோ அந்த அளவுக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார்.

அவர் 10ஆவது, 11ஆவது அல்லது 12ஆவது ஓவர்களில் பேட் செய்ய வருவதை அவர் விரும்பவில்லை என நான் நினைக்கிறேன். அப்படி அந்த நேரத்தில் பேட் செய்ய வந்தால் விக்கெட்டுகளுக்கு இடையே ரன் அவுட் ஆகாமல் வேகமாக ஓட வேண்டியிருக்கும். அதிக அளவிலான இரண்டு ரன்கள் எடுக்க வேண்டியிருக்கும். அது அவருடைய முழங்கால் வலியை மேலும் அதிகப்படுத்தும்.

அவர் அதனால் தாமதமாக பேட் செய்து அணியின் வெற்றிக்கு உதவும் விதமாக விளையாடுவதையே விரும்புகிறார். அவருக்கு முன்னதாக களமிறங்கும் துபே, ஜடேஜா, ரஹானே மற்றும் ராயுடு ஆகியோரின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். கடந்த வாரம் தில்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக விளையாடியப் போட்டியில் அவர் முழங்கால் வலியால் அவதிப்பட்டார்.

சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக சிஎஸ்கே விளையாடிய போட்டி சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே விளையாடும் கடைசி போட்டி என்பதால் மைதானத்தை சுற்றி சிஎஸ்கே அணி வலம் வந்தது. அப்போதும் அவர் முழங்கால் வலிக்காக முழங்கால் பட்டை அணிந்திருந்தார். அவருக்கு சேப்பாக்கம் மைதானம் தவிர்த்து பிற மைதானங்களிலும் கிடைக்கும் வரவேற்பு பிரமிக்க வைக்கிறது. அவர் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு விளையாடலாம். அவர் இப்போதும் சிறப்பாகவே பேட்டிங் செய்கிறார். அவர் ஆட்டத்தினை வெற்றிகரமாக முடிக்கும் விதமே அவரது பேட்டிங் திறனுக்கு சாட்சி” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை