சிஎஸ்கேவில் ரஹானேவை தேர்வு செய்தது குறித்து மனம் திறந்த காசி விஸ்வநாதன்!

Updated: Sat, Apr 29 2023 19:35 IST
Image Source: Google

சர்வதேச இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக இருந்து வந்த ரஹானே, லிமிடெட் ஓவர் போட்டிகளுக்கு 2018ஆம் ஆண்டிற்கு பிறகு எடுக்கப்படவில்லை. பின்னர் டெஸ்ட் அணியின் துணைக்கேப்டன் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டு, மொத்தமாக டெஸ்ட் அணியில் இருந்தும் ஓராண்டாக நீக்கப்பட்டார். உள்ளூர் போட்டிகளில், சையது முஸ்தக் அலி தொடரில் படுமோசமாக செயல்பட்டார். ரஞ்சிக்கோப்பை தொடரில் இரட்டை சதம் மற்றும் சதம் விளாசி டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் பார்மிற்கு வந்தார்.

ரஹானே, உள்ளூர் டி20 தொடர்களில் எதிர்பார்த்தவாறு செயல்படாததால் கடந்த டிசம்பர் மாதம் அணியிலிருந்து நீக்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இருப்பினும் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்ற ராகனேவை ஆரம்பவிலையான 50 லட்சம் ரூபாய் கொடுத்து சிஎஸ்கே அணி நிர்வாகம் எடுத்தது. இவரை எடுத்ததற்கு பல்வேறு விமர்சனங்களும் வந்தது.

இருப்பினும் ஒவ்வொரு சீசனிலும் இதுபோன்ற மூத்த வீரர்களை சிஎஸ்கே அணி நிர்வாகம் எடுப்பது வழக்கம். கடந்த சீசனில் புஜாரா கூட சிஎஸ்கே அணி எடுக்கப்பட்டார். ஆனால் ஒரு போட்டியில் கூட விளையாட வைக்கப்படவில்லை. அதுபோன்று ரஹானேவும் விளையாட வைக்கப்படமாட்டார் என்று கருதப்பட்டது.

முதல் இரண்டு லீக் போட்டிகளில் விளையாட வைக்கப்படாத ரஹானே, மூன்றாவது லிக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாட வைக்கப்பட்டார். காரணம், அப்போட்டிக்கு முன்பு முன்னணி பிளேயிங் லெவன் வீரர்களாக இருந்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் மொயின் அலி ஆகிய இருவரும் உடல்நிலை காரணமாக வெளியில் இருந்தனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அசுரவேகத்தில் பேட்டிங் செய்த ரஹானே, வெறும் 27 பந்துகளில் 61 ரன்கள் விளாசினார். இதுதான் சிஎஸ்கே அணி வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது.

ரஹானே அத்துடன் நிற்கவில்லை. அடுத்தடுத்த போட்டிகளிலும் அபாரமாக செயல்பட்டார். கொல்கத்தா அணிக்கு எதிராக 71 ரன்களை 29 பந்துகளில் விளாசி இன்னும் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் சிறந்த ஃபார்மில் இருந்ததற்காகவும் ஐபிஎல் போட்டிகளில் கூடுதல் பார்மை பெற்றதற்காகவும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கான இந்திய அணிலும் ரகானே விற்கு இடம் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் ரஹானேவை எப்படி சிஎஸ்கே அணிக்கு எடுக்க வேண்டும் என்று தோன்றியது? எதன் அடிப்படையில் அவர் சிஎஸ்கே நிர்வாகத்தின் பார்வைக்கு வந்தார்? ஆகியவை பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார் சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன்.

இதுகுறித்து பேசிய அவர், “சிஎஸ்கே அணிக்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தேவைப்பட்டது. பட்ஜெட் மிகவும் குறைவாக இருந்தது. அந்த நேரத்தில் ரகானே அனுபவம் மிக்க வீரராக இருப்பதால், அவரை எடுக்கலாமா? வேண்டாமா? என்கிற யோசனையில் இருந்தோம். உடனடியாக தோனியிடம் அழைத்து பேசியபோது, ‘அப்படிப்பட்ட ஒருவர் கிடைத்தால், உடனடியாக வாங்கிக் கொள்ளுங்கள்.

அப்போது எனக்கு தோனி வேறு ஏதோ கணக்கு போடுகிறார் என்று தோன்றியது. உடனடியாக தோனி கூறியபடியே ரஹானேவை ஏலத்தில் கேட்டோம். இவர் சரியான ஃபார்மில் இல்லாததால் வேறு எவரும் எங்களுக்கு போட்டியாக வரவில்லை. ஆரம்ப விலையிலேயே கிடைத்துவிட்டார். ரகானேவை ஏலத்தில் எடுக்கச் சென்றது இப்படித்தான்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை