ரஞ்சி கோப்பை: உத்திராகாண்டை வீழ்த்தி மும்பை அபார வெற்றி!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் காலிறுதிச்சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 2ஆவது காலிறுதிப்போட்டியில் மும்பை - உத்திராகாண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி சுவெத் பார்க்கர் - சர்ஃப்ராஸ் கான் ஆகியோரது அபாரமான பேட்டிங்கின் மூலம் முதல் இன்னிங்ஸில் 647 ரன்களைக் குவித்து டிக்ளர் செய்தது.
இதில் சுவெத் பார்க்கர் 252 ரன்களையும், சர்ஃப்ராஸ் கான் 153 ரன்களையும் சேர்த்தனர். உத்திராகாண்ட் அணியில் தீபக் தபோலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய உத்திராகண்ட் அணி மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் 114 ரன்களிலேயே அந்த அணி அனைத்து விக்கெட்டுகலையும் இழந்தது. மும்பை அணி தரப்பில் ஷாம்ஸ் முலானி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து 534 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய மும்பை அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்தும், பிரித்வி ஷா, ஆதித்யா டாரே ஆகியோர் அரைசதமும் விளாசினார்.
இதன்மூலம் உத்திராகண்ட் அணிக்கு 795 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய உத்திராகண்ட் அணியால் இரண்டாவது இன்னிங்ஸிலும் மும்பை அணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
இதனால் 69 ரன்களுக்கே உத்திராகண்ட் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் மும்பை அணி 725 ரன்கள் வித்தியாசத்தில் உத்திராகண்ட் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெதிவுசெய்தது.