ரஞ்சி கோப்பை: மும்பை அணியில் இடம்பிடித்த அர்ஜுன் டெண்டுல்கர்!
இந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டிக்கான மும்பை அணி இளம் வீரர் பிருத்வி ஷா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார். ரஞ்சி கோப்பைப் போட்டியில் எலைட் குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள மும்பை அணி, ஜனவரி 13 அன்று மஹாராஷ்டிரத்துக்கு எதிராக தனது முதல் ஆட்டத்தை விளையாடுகிறது.
இதில் 22 வயது இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கர், கடந்த வருடம் சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டிக்கான மும்பை அணியில் இடம்பெற்றார். அர்ஜுன் விளையாடிய இரு ஆட்டங்களிலும் மும்பை அணிக்குத் தோல்வியே கிடைத்தன. ஹரியாணாவுக்கு எதிராக 1/34, புதுச்சேரிக்கு எதிராக 1/33 என சுமாராகவே பந்துவீசினார்.
இதன்பிறகு ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, அர்ஜுனை ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சியில் ஈடுபட்டபோது அவருக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஓர் ஆட்டத்திலும் விளையாட முடியாமல் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகினார். இந்திய அணியின் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராகப் பணியாற்றியுள்ள அர்ஜுன், இந்திய யு-19 அணிக்காகவும் விளையாடியுள்ளார்.
அதேபோல் பிரித்வி ஷா கடந்த வருடம் மும்பை அணிக்குத் தலைமை தாங்கி விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியை வென்றார். இதையடுத்து முதல்முறையாக ரஞ்சி கோப்பைப் போட்டியில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை அணியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான், ஆதித்யா தரே, ஷிவம் டுபே, தவால் குல்கர்னி போன்ற பிரபல வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.