ஐபிஎல் 2022: என் குழந்தைகளை என்னால் திருப்திபடுத்த முடியவில்லை - டேவிட் வார்னர்!
மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக்ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
116 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 57 பந்துகள் மீதமிருக்கையில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 119 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா 41 ரன்களில் ஆட்டமிழந்தார். உடன் ஆடிய டேவிட் வார்னர் 30 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சர்பிராஸ்கான் 12 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
ஐபிஎல் தொடரில் இதுவரை 4 இன்னிங்ஸ்களில் ஆடிய வார்னர் தொடர்ந்து அடிக்கும் 3ஆவது அரைசதம் இதுவாகும். பிரித்விஷாவுக்கும், வார்னரும் தற்போது 197 ரன்களுடன் உள்ளனர். வார்னர் 4 போட்டிகளில் 3 அரைசதத்துடன் 63 சராசரியுடன் உள்ளார்.
ஆனால், என்னதான் டெல்லி அணியின் வெற்றிக்காக வார்னர் உழைத்தாலும், அவரின் குழந்தைகளை அவரால் திருப்திபடுத்த முடியவில்லை. இங்கிலாந்து வீரரும், ராஜஸ்தான் ராயல்ஸ் வீரரும் ஆரஞ்சு தொப்பிக்கு சொந்தக்காரரமான ஜாஸ் பட்லர் 2 சதங்களை இந்த ஐபிஎல் தொடரில் அடித்துள்ளார். அவர் போன்று ஏன் வார்னர் சதம் அடிக்கவில்லை என்று குழந்தைகள் வார்னரிடம் கேள்வி எழுப்புகின்றன.
வெற்றிக்குப்பின் டேவிட் வார்னர் அளித்த பேட்டியில் கூறுகையில் “ ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜாஸ் பட்லர் போன்று நான் ஏன் இன்னும் சதம் அடிக்கவில்லை என்று என்னுடைய குழந்தைகள் என்னிடம் கேள்வி எழுப்புகிறார்கள். உங்களால் சதம் அடிக்க முடியாதா, ஜாஸ் பட்லர் அடித்துவிட்டார் நீங்கள் ஏன் சதம் அடிக்கவில்லை என என்னிடம் கேட்கிறார்கள். என் குழந்தைகள் கோரிக்கையை நிறைவற்ற முயல்வேன், பிரித்விஷாவுடன் இணைந்து விளையாடியது மகிழ்ச்சியாக இருக்கிறது.
எங்கள் வெற்றிக்கு முக்கியக் காரணம் பந்துவீச்சாளர்கள்தான். பந்துவீச்சாளர்கள் அருமையாகப் பந்துவீசி பஞ்சாப்பை குறைந்தரன்னில் சுருட்டி பேட்ஸ்மேன்கள் பணியை எளிதாக்கிவிட்டார்கள். பவர்ப்ளே ஓவரையும் நாங்கள் சரியாகப் பயன்படுத்திக்கொண்டோம். வெற்றிக்கு உரியவர்கள் பந்துவீச்சாளர்கள்தான்.இப்போதும் கூறுகிறேன் ஃபார்ம் தற்காலிகம்தான், கிளாஸ்தான் நிரந்தரம்” எனத் தெரிவித்தார்.