நதின் டி கிளார்க், லாரா வோல்வார்ட் அபாரம்; இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலன இந்திய அணியை எதிர்த்து, லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி பலப்பரீட்சை நடத்தியது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ரவால் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் மந்தனா 23 ரன்களில் விக்கெட்டை இழக்க, 37 ரன்களைச் சேர்த்த கையோடு பிரதிகா ராவலும் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஹர்லீன் தியோ 13 ரன்னிலும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 9 ரன்னிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், தீப்தி சர்மா 4 ரன்னிலும், அமஞ்சோத் கவுர் 13 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டியதால், இந்திய அணி தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த ரிச்சா கோஷ் மற்றும் ஸ்நே ரானா இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர்.
இதில் அபாரமாக விளையாடிய ரிச்சா கோஷ் தனது அரைசதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் இருவரும் இணைந்து 8ஆவது விக்கெட்டிற்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்நே ரானா 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் இறுதிவரை களத்தில் இருந்த ரிச்சா கோஷ் 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் 94 ரன்களை சேர்த்தனர். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 49. ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சோளே டிரையன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் லாரா வோல்வார்ட் ஒருபக்கம் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த, மறுமுனையில் விளையாடிய டஸ்மின் பிரிட்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், சுனே லூஸ் 5 ரன்னிலும், மரிசான் கேப் 20 ரன்னிலும், அன்னேக் போஷ் ஒரு ரன்னிலும், சினோல ஜாஃப்டா 14 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். மறுபக்கம் அபாரமாக விளையாடி அரசைதம் கடந்து அசத்திய லாரா வோல்வர்ட் 8 பவுண்டரிகளுடன் 70 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார்.
Also Read: LIVE Cricket Score
பின்னர் இணைந்த சோளெ டிரையன் - நதின் டி கிளார்க் இணை அபாரமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் நதின் டி கிளார்க் தனது அரைசதத்தைப் பதிவு செய்ய, மறுபக்கம் சோளெ டிரையன் 49 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும் இந்த ஆட்டத்தில் இறுதிவரை களத்தில் இருந்த நதின் டி கிளார்க் 8 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 84 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 48.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தியது.