வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான வங்கதேச டி20 அணியில் நஹித் ரானா சேர்ப்பு!
வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை இரு அணிகளும் 1-1 என்ற கணகில் சமனில் முடித்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
அதைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகள் மோதும் மூன்று போட்டிகளை உள்ளடக்கிய டி20 தொடரானது நாளை முதல் (டிசம்பர் 15) செயின்ட் வின்செண்டில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த் அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ காயம் குணமடையாத காரணத்தால் இத்தொடரில் இருந்தும் விலகியுள்ளார்.
இதன் காரணமாக வங்கதேச டி20 அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இத்தொடருக்கான வங்கதேச அணியில் அறிமுக வீரர் ரிப்பன் மொண்டலிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து அஃபிஃப் ஹுசைன், சௌமியா சர்க்கார், நசும் அகமது மற்றும் ஷமிம் ஹுசைன் உள்ளிட்டோரும் வங்கதேச டி20 அணிக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் வங்கதேச அணியில் வேகப்பந்து வீச்சாளர் நஹித் ரானா சேர்க்கப்பட்டுள்ளார். வங்கதேச அணிக்காக இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளிலும், 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள நஹித் ரானா, டி20 அணியில் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலிரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள நஹித் ரானா அதில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி: ரோவ்மேன் பாவெல் (கே), பிராண்டன் கிங், கேசி கார்டி, ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், ஜஸ்டின் கிரீவ்ஸ், டெரன்ஸ் ஹிண்ட்ஸ், அகீல் ஹொசைன் (முதல் இரண்டு போட்டிகளுக்கு மட்டும்), ஜெய்டன் சீல்ஸ் (மூன்றாவது போட்டிக்கு மட்டும்), அல்ஸாரி ஜோசப், எவின் லூயிஸ், ஓபேத் மெக்காய், குடாகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூரன், ரொமாரியோ ஷெப்ஃபர்ட், ஷமார் ஸ்பிரிங்கர்.
Also Read: Funding To Save Test Cricket
வங்கதேச டி20 அணி: லிட்டன் தாஸ் (கேப்டன்), சௌமியா சர்க்கார், தன்ஸித் ஹசன் தமீம், பர்வேஸ் ஹுசைன் எமன், அஃபிஃப் ஹுசைன், மெஹதி ஹசன் மிராஸ், ஜக்கர் அலி, ஷமிம் ஹுசைன், மஹேதி ஹசன், ரிஷாத் ஹுசைன், நசும் அஹ்மத், தஸ்கின் அஹ்மத், தன்சீம் ஹசன் ஷாகிப், ஹசன் மஹ்மூத், ரிப்பன் மொண்டோல, நஹித் ரானா.