ZIM vs AFG, 2nd T20: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஃப்கானிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை ஆஃப்கானிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஜிம்பாப்வேவை ஒயிட்வாஷ் செய்தது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியிலும் ஆஃப்கானிஸ்தான் வெற்றிபெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஹராரேவில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் ரஹ்மனுல்லா குர்பாஸ், உஸ்மான் கானி, தர்விஸ் ரசூலி, ஹஸ்ரதுல்லா ஸஸாய் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த நஜிபுல்ல ஸத்ரான் - முகமது நபி இணை அருமையாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸத்ரான் அரைசதம் அடித்து அசத்தினார். பின்னர் 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸத்ரான் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது நபி 43 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணியில் வெஸ்லி மதவெரே 8 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த இன்னசெண்ட் கையா - மருமானி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் மருமானி 30 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் எர்வினும் 2 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுமுனையிலிருந்த இன்னசெண்ட் கையா அரைசதம் கடந்தார். அவருக்கு துணையாக விளையாடிய சிக்கந்தர் ரஸாவும் பொறுப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.
இதில் இன்னசெண்ட் கையா 54 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, சிக்கந்தர் ரஸா 41 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறினர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது.