உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: அஸ்வினை முந்தினார் நாதன் லையன்!

Updated: Sun, Mar 03 2024 14:24 IST
Image Source: Google

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

ஆனாலும் கடைசிவரை களத்தில் இருந்த கேமரூன் க்ரீன் அபாரமான ஆட்டத்த வெளிப்படுத்து சதமடித்ததுடன், 23 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 174 ரன்களைக் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 383 ரன்களைச் சேர்த்து வலுவான நிலையில் ஆல் அவுட்டானது. இதையடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் கிளென் பிலீப்ஸின் சிறப்பான ஆட்டத்தினால் முதல் இன்னிங்ஸில் 179 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லையன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன்பின் 204 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய கிளென் பிலீப்ஸின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் கிளென் பிலீப்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் நியூசிலாந்து அணிக்கு 370 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி நாதன் லையனின் சுழலில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.

இதனால், நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 196 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய நாதன் லையன் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்று அசத்தியது. இந்நிலையில் இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் நாதன் லையன் சாதனை படைத்துள்ளார். 

அதன்படில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய் வீரர் எனும் சாதனையை நாதன் லையன் படைத்துள்ளார். அதன்படி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நாதன் லையன் 10 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். அவரைத்தொடர்ந்து இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் 9 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாம் இடத்தையும், ஆஸியின் பாட் கம்மின்ஸ் 8 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாம் இடத்திலும் உள்ளனர். 

 

இதுதவிர உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒன்பது வெவ்வேறான நாடுகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் எனும் சாதனையை நாதன் லையன் படைத்துள்ளார். முன்னதாக முன்னாள் ஜாம்பவான்கள் முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே ஆகியோர் 9 நாடுகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் இப்போட்டியின் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து நாதன் லையன் 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் கடந்த 2006ஆம் ஆண்டுக்கு பிறகு நியூலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். முன்னதாக கடந்த 2006ஆம் ஆண்டு வெல்லிங்டனில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியின் முத்தையா முரளிதரன் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை