AUS vs IND, 1st Test: நாதன் லையன் சுழலில் சிக்கியது விண்டீஸ்; ஆஸி அபார வெற்றி!
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் 200 ரன்கள் மற்றும் மார்னஸ் லபுசாக்னே 204 ரன்கள் என ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் விளையாடி இரட்டைசதமடித்தனர். டிராவிஸ் ஹெட் 99 ரன்களை குவித்து ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 598 ரன்களை குவித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிரைக் பிராத்வெயிட் 64 மற்றும் சந்தர்பால் 51 ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து 315 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணியில், முதல் இன்னிங்ஸில் இரட்டைசதமடித்த லபுஷாக்னே, 2ஆவது இன்னிங்ஸில் சதமடித்தார். இதையடுத்து லபுசாக்னே 104 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்த நிலையில், 2 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
ஆஸ்திரேலிய அணி மொத்தமாக 497 ரன்கள் முன்னிலை பெற, 498 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நிர்ணயித்தது. இதையடுத்து 4ஆம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் அடித்துள்ளது.
கிட்டத்தட்ட வெற்றிக்கு சாத்தியமில்லாத இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் சந்தர்பால் 45 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ப்ரூக்ஸ் 11 மற்றும் பிளாக்வுட் 24 ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் பேட்டிங் ஆடிவரும் தொடக்க வீரர் கிரைக் பிராத்வெயிட் சதமடித்தார். அவர் ஆஸ்திரேலிய பவுலிங்கை சிறப்பாக எதிர்கொண்டு அபாரமாக விளையாடி வந்தார்.
பிராத்வெயிட் 101 ரன்களுடன் களத்தில் இருந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் அடித்திருந்த நிலையில், 4ஆம் நாள் ஆட்டம் முடிந்தது. அதன்பின் கடைசி நாளான இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸின் வெற்றிக்கு 306 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கியது.
அதன்படி இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறுது நேரத்திலேயே கைல் மேயர்ஸ் 10 ரன்களோடு விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த கிரேய்க் பிராத்வையிட்டும் 110 ரன்களில் நாதன் லையன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஜேசன் ஹோல்டர், ஜோஷூவா டா சில்வா ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ரோஸ்டன் சேஸ் - அல்ஸாரி ஜோசப் இணை அதிரடியான் ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபாரமாக செயல்பட்ட ரோஸ்டன் சேஸ் அரைசதம் கடந்து 55 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அல்ஸாரி ஜோசப் 45 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதன்பின் கீமார் ரோச் சந்தித்த முதல் பந்திலேயே நாதன் லையனிடன் விக்கெட்டைப் பறிக்கொடுத்தார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 333 ரன்களை மட்டுமே எடுத்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய நாதன் லையன் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக மார்னஸ் லபுசாக்னே தேர்ந்தெடுக்கப்பட்டார்.