அஸ்வின் இடமிருந்து நான் சிலவற்றை கற்றுள்ளேன் -நாதன் லையன்!

Updated: Wed, Dec 13 2023 20:16 IST
அஸ்வின் இடமிருந்து நான் சிலவற்றை கற்றுள்ளேன் -நாதன் லையன்! (Image Source: Google)

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியா அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரில் 21ஆம் நூற்றாண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட தோற்காமல் மிரட்டி வரும் ஆஸ்திரேலியா இம்முறையும் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொடரில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு ஆஸ்திரேலியாவின் நட்சத்திர முதன்மை சுழல் பந்துவீச்சாளர் நேதன் லையன் மிகப்பெரிய சவாலை கொடுப்பார் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் சுழலுக்கு சாதகமற்ற மைதானங்களைக் கொண்ட ஆஸ்திரேலியாவில் ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு பின் நிரந்தரமான இடத்தை பிடிக்கும் அளவுக்கு கடந்த 10 வருடங்களாக அவர் தம்முடைய திறமையால் நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

குறிப்பாக இதுவரை 122 போட்டிகளில் 496 விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர் இத்தொடரில் 500 விக்கெட்களை சாதனை படைக்க தயாராக உள்ளார். இந்நிலையில் தம்மைப் போலவே நவீன கிரிக்கெட்டில் 94 டெஸ்ட் போட்டிகளில் 489 விக்கெட்களை எடுத்துள்ள இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வினை பார்த்து நிறைய அம்சங்களை கற்று வருவதாக நேதன் லையன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “அஸ்வினை பாருங்கள். அவர் உலகத்தரம் வாய்ந்த பவுலர். கேரியரின் ஆரம்பத்திலிருந்தே அவரை நான் மிகவும் உன்னிப்பாக பார்த்து வருகிறேன். நாங்கள் இருவரும் உலகின் பல்வேறு சூழ்நிலைகளை கொண்ட மைதானங்களில் நேருக்கு நேராக எதிரெதிர் அணிகளில் விளையாடியுள்ளோம். அஸ்வின் விளையாடி வரும் விதத்திற்கு அவர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். கண்டிப்பாக அவரிடமிருந்து நான் சிலவற்றை கற்றுள்ளேன். 

உங்களுக்கு எதிராக விளையாடும் வீரர்களிடமிருந்தும் நீங்கள் கற்பதற்கான வாய்ப்புகள் எப்போதும் இருக்கும். எனக்கு தெரியாமல் அவர் ஒரு வகையில் என்னுடைய பெரிய பயிற்சியாளர்களில் ஒருவராக இருக்கலாம். நாங்கள் இருவருமே விரைவில் 500 விக்கெட்டுகள் மைல்கல்லை உடைக்கப் போவதை பார்ப்பது நல்ல உணர்வை கொடுக்கிறது. நாங்கள் எங்கே முடிக்கிறோம் என்பதை பார்க்க வேண்டும். எங்களின் கேரியர் முடிவில் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்திக்கொண்டு விளையாடிய காலங்களைப் பற்றி நன்றாக பேசுவதை விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை