WI vs IND, 1st T20I: வெற்றி குறித்து பேசிய ரோஹித் சர்மா!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நேற்று ட்ரினிடாட் நகரில் தொடங்கியது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டி20 போட்டியை இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரான் முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரோகித் சர்மா 64 ரன்களையும், தினேஷ் கார்த்திக் 41 ரன்களையும் குவித்தனர். இதன் காரணமாக 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் மட்டுமே குவித்ததால் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இந்த போட்டியில் அபார வெற்றி பெற்றது.
பின்னர் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “போட்டியின் ஆரம்பத்திலேயே இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது இங்கு மிகவும் கடினமாக இருந்தது. ஆனாலும் நாங்கள் ஒரு நல்ல ரன் குவிப்போடு எங்களது இன்னிங்ஸை முடிக்க நினைத்தோம். முதல் பத்து ஓவர்கள் முடிகையில் 190 ரன்கள் வரும் என்ற நம்பிக்கையே என்னிடம் இல்லை.
ஆனாலும் இறுதி வரிசையில் இறங்கிய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடியதால் எங்களால் பெரிய ரன் குவிப்பிற்கு செல்ல முடிந்தது. பின்னர் பந்து வீச்சிலும் சரியான திட்டங்களை நாங்கள் வெளிப்படுத்தியதால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் கிடைத்தது. அதுமட்டுமின்றி சிறப்பான பந்துவீச்சின் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணியை எளிதாக வீழ்த்த முடிந்தது.
இந்த மைதானத்தில் பந்தினை கனித்து பேட்டிங் செய்வது சற்று சிரமமாகவே இருந்தது. ஆனாலும் நமது வீரர்கள் விளையாடிய விதம் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த மைதானத்தில் ரசிகர்களிடம் இருந்து எங்களுக்கு கிடைத்த ஆதரவும் நன்றாக இருந்தது” என கூறியுள்ளார்.