NED vs ENG, 2nd ODI: ராய், சால்ட் அதிரடியில் இங்கிலாந்து வெற்றி!
இங்கிலாந்து அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி இன்று தொடங்கியது. இப்போட்டிக்கு முன்னதாக மழை பெய்த காரணத்தால் டாஸ் தாமதமாகி, ஆட்டம் 41 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
அதன்பின் இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் விக்ரம்ஜித் சிங் 10, மேக்ஸ் ஓடவுட் 7, டாம் கூப்பர் 17 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த பாஸ் டி லீட் - கேப்டன் எட்வர்ட்ஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இதில் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டி லீட் 38 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பாக விளையாடிய எட்வர்ட்ஸ் அரைசதம் கடந்தார்.
அதன்பி 78 ரன்கள் எடுத்திருந்த எட்வர்ட்ஸ் ரன் அவுட்டாகி அதிர்ச்சியளிக்க, அடுத்து வந்த நிடமானூர் 28, வான் பீக் 30 ரன்களைச் சேர்த்தனர். இதனால் 41 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் வில்லி, ஆதில் ரஷித் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் - பிலிப் சல்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதமும் கடந்து அசத்தினர்.
அதன்பின் 73 ரன்களில் ஜேசன் ராய் ஆட்டமிழக்க, 77 ரன்களில் பிலிப் சால்டும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் மோர்கன் இந்த ஆட்டத்திலும் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லிவிங்ஸ்டோனும் 4 ரன்களோடு நடையைக் கட்டினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த டேவிட் மாலன் - மொயீன் அலி இணை விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டதுடன், அணியை வெற்றிக்கும் அழைத்துச் சென்றனர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 36.1 ஓவர்களில் இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.