டர்னிங் பிட்ச்களில் விளையாடுவதை மேம்படுத்த வேண்டும் - கௌதம் கம்பீர்!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகின்றன. நடைபெற்று முடிந்த இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியுள்ளது.
இதனையடுத்து இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது வரும் ஆகஸ்ட் 02ஆம் தேதி முதல் கொழும்புவில் தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து இலங்கை சென்றுள்ள இந்திய வீரர்கள் தங்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணி வீரர்கள் டர்னிங் பிட்ச்சுகளை விளையாட அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிசிசிஐ காணொளியில் பேசிய அவர், “சிறப்பான தொடர் வெற்றிக்கு வாழ்த்துக்கள். மேலும் அணியின் கேப்டனாக மட்டுமின்றி பேட்டிங்கிலும் அபாரமாக செயல்பட்ட சூர்யகுமார் யாதவிற்கும் எனது வாழ்த்துகள். இத்தொடருக்கு முன்னதாக நான் கேட்டதை தற்போது நீங்கள் வழங்கியுள்ளீர்கள்.
ஒவ்வொரு ஆட்டத்திலும் நீங்கள் விடாமல் போராடினால் உங்களுக்கான வெற்றி கிடைக்கும். ஒவ்வொரு பந்திற்கு, ஒவ்வொரு ரன்னுக்கும் நாம் தொடர்ந்து போராடும்போதுதான் இதுபோன்ற வெற்றிகளை நம்மால் பெறமுடியும். அதற்கான சிறந்த உதாரணம் நேற்றைய போட்டி தான். நாங்கள் தொடர்ந்து முன்னேறி வருகிறோம், எங்கள் திறமைகளையும் மேம்படுத்திக் கொண்டே இருக்கிறோம், ஏனென்றால் இதுபோன்ற விக்கெட்டுகளில் விளையாடுவதில் நாம் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
ஏனெனில் இதுபோன்ற விக்கெட்டுகளை எதிர்காலத்தில் பெறும் சமயத்தில் இந்த அனுபவம் நமக்கு உதவும். எனவே நாம் முதலில் நிலைமை மற்றும் மைதானங்களை மிக விரைவாக மதிப்பீடு செய்ய வேண்டும், அதே போல் வெற்றிக்கான ஸ்கோர் என்ன எனபதையும் மதிப்பிட வேண்டும். இந்த போட்டியில் இருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம். ஆனால் அதை விட முக்கியமானது, இது ஒரு சிறந்த தொடராக அமைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.