சந்தேகமே இல்லை அவர் 360 டிகிரி பேட்ஸ்மேன்தான் - சூர்யகுமார் யாதவ் குறித்து வதேரா!
ஐபிஎல் தொடரில் நேற்று பஞ்சாப் மொகாலி மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி பரபரப்பாக நடைபெற்று முடிந்தது.இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 214 ரன்கள் குவிக்க, இந்த பெரிய இலக்கை ஒரு ஓவர் மீதம் வைத்து மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் சேர்ந்து அமைத்த 116 ரன்கள் மிக முக்கிய காரணமாக அமைந்தது. இந்தப் போட்டியில் நான்காவது இடத்தில் பேட்டிங்க்கு வந்த சூரியகுமார் யாதவ் 31 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். இதில் எட்டு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸ்ர்கள் அடக்கம்.
இந்நிலையில், சூர்யகுமார் பற்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் நேஹல் வதேரா, “சந்தேகமே இல்லை அவர் 360 டிகிரி பேட்ஸ்மேன்தான். அவர் வலைப்பயிற்சியில் நிறைய முறை தனது ஷாட்களை பயிற்சி செய்கிறார். அதனால் அந்த ஷாட்கள் அவருக்கு இயல்பாக வருவது போல தெரிகிறது. அவர் உலகின் மிகச்சிறந்த டி20 பேட்டர்களில் ஒருவர். அந்த வித்தியாசமான ஷாட்கள் குறித்து அவர் எங்களுக்கு டிப்ஸ் தருவதற்கு ஒருபோதும் வெட்கப்பட்டதே கிடையாது. அவரிடம் இருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொள்கிறோம்.
இம்பாக்ட் பிளேயர் விதி வீரர்கள் பயமின்றி சுதந்திரமாக விளையாட உதவுகிறது. தங்களது அணியில் ஒரு பேட்ஸ்மேன் அதிகமாக உள்ளதால் மற்ற பேட்ஸ்மேன்கள் தைரியமாக விளையாடுகிறார்கள். இதுவே போட்டிகள் மிக நெருக்கமாக வந்து முடிவதற்கும் காரணமாக இருக்கிறது. இப்படியான போட்டிகளை நாங்கள் விரும்புகிறோம். எங்கள் பந்துவீச்சாளர்கள் மீது எங்களுக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. இந்த சீசனில் அனைத்து அணிகளும் அபாரமான ஸ்கோரை அடித்துள்ளன. எனவே பந்துவீச்சாளர்கள் தவறு செய்கிறார்கள் என்று சொல்ல முடியாது” என்று தெரிவித்துள்ளார்.