விராட் கோலியின் திறமை, சாதனைகளை அனைவரும் அறிவோம் - ஆஷிஷ் நெஹ்ரா!

Updated: Thu, Jul 14 2022 21:41 IST
Image Source: Google

இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. அடுத்ததாக மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. 

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 தொடரில் கோலி, பும்ரா, சஹால் ஆகியோர் ஓய்வு காரணமாக அணியில் இடம்பெறவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகச் சதமடிக்காமல் உள்ள விராட் கோலி, இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய டி20 தொடரில் இரு ஆட்டங்களில் 1,11 எனக் குறைவான ரன்களே எடுத்தார். 

முதல் ஒருநாள் ஆட்டத்தில் காயம் காரணமாக விளையாடவில்லை. இந்திய டெஸ்ட் அணியிலிருந்து அஸ்வினை நீக்கமுடியும் என்றால் கோலியையும் நீக்கலாம் என முன்னாள் வீரர் கபில் தேவ் விமர்சனம் செய்துள்ளார். முன்னாள் வீரர்கள் பலரும் இதேபோல பேசியுள்ளார்கள்.

கோலியின் நிலை பற்றி முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா கூறுகையில், “வெளியே என்ன சொல்கிறார்கள் என்பது முக்கியமல்ல. உங்களுடைய அணி வீரர்கள், அணி நிர்வாகம், தேர்வுக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் உங்களுக்கு எந்தளவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது முக்கியம். நாம் இங்கே விராட் கோலியைப் பற்றி பேசுகிறோம். 

அவர் சரியாக விளையாடாமல் போனால் இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் என்று எங்கும் எழுதி வைக்கப்படவில்லை தான். ஆனால் இதற்கு முன்பு நீங்கள் நிறைய சாதித்திருந்தால் உங்களுக்குக் கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். விராட் கோலியின் திறமை, அவருடைய சாதனைகளை அனைவரும் அறிவோம். 

33 வயதில் உடற்தகுதியும் அவருக்கு ஒரு பிரச்னையில்லை. விரைவில் அவர் நன்றாக விளையாடுவார். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்குப் பிறகு புதிய விராட் கோலியை நாம் எதிர்பார்க்கலாம். ஒரு மாத ஓய்வு அவருக்கு உதவியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை