நெதர்லாந்து சிறப்பாக விளையாடும் திறன் கொண்ட அணி - ஆகாஷ் சோப்ரா!
இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்த வாரம் அப்செட் வாரமாக அமைந்து ரசிகர்களுக்கு எக்கச்சக்க உற்சாகத்தை அளித்திருக்கிறது. இரு நாட்களுக்கு முன்பாக டெல்லியில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி எல்லோருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்தது.
நடப்பு இங்கிலாந்து அணி வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அசுர பலம் கொண்ட அணியாக இருக்கிறது. அவர்களுடைய பிளேயிங் லெவனில் 11 பேரும் பேட்டிங் செய்ய முடியும். அப்படிப்பட்ட ஒரு அணியை ஆப்கானிஸ்தான் வீழ்த்தியது பேராச்சரியத்தை உண்டாக்கியது. இதன் காரணமாகவே இதுவரை நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் அப்செட் போட்டிகளில், இந்தப் போட்டிதான் முதலிடத்தில் இருக்கிறது என்று பல முன்னாள் வீரர்களும் கூறுகிறார்கள்.
இதன் பரபரப்பு அடங்கும் முன்பாகவே நேற்று தரம்சாலா மைதானத்தில் வைத்து நெதர்லாந்து அணி தென் ஆப்பிரிக்க அணியை மிக எளிதாக வென்று, ரசிகர்களின் உற்சாகத்தை இன்னும் அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அரை இறுதி வாய்ப்புக்கு யாருக்கும் எந்த கதவுகளும் சாத்தப்படாமல் இருக்கிறது. இதன் காரணமாக யார் வேண்டுமானாலும் வெளியேறலாம் என்பது, ரசிகர்களுக்கு சுவாரசியத்தை கூட்டியுள்ளது
இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, “நெதர்லாந்து ஒரு அனுபவமற்ற வீர்ர்கள் நிறைந்த அணி. அவர்களுக்கு தொழில் வல்லுநர்கள் மிகக் குறைவு. அதற்குக் காரணம் அவர்களிடம் பணம் இல்லை அல்லது மிகக் குறைந்த ஊதியம் மட்டுமே வழங்கப்படுவதும் தான். அங்கு யாருக்கும் மத்திய ஒப்பந்தம் இல்லை. மாறாக அவர்காள் எவ்வளவு கிரிக்கெட் விளையாடுகிறார்களோ அவ்வளவு ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
அவர்கள் தகுதிச் சுற்றுகளின் போது, அணியின் முக்கியமான வீரர்கள் கூட அங்கு இல்லை, அவர்கள் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். பாஸ் டி லீட் போன்ற ஒருவர் தகுதிச் சுற்றுக்கு வந்து, தகுதிச் சுற்றில் விளையாட பணம் இல்லாததால் திரும்பிச் சென்றார். எனவே மக்கள் நெதர்லாந்துக்காக விளையாட விரும்பினாலும், பணப் பற்றாக்குறை அவர்களைத் தடுத்து நிறுத்துகிறது.
நெதர்லாந்து சிறப்பாக விளையாடும் திறன் கொண்ட அணி. அதைத்தன் அவர்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக செய்துகாட்டினர். அவர்களுக்கும் மற்ற அணிகளைப் போல பொருளாதாரம் கிடைத்தால் நிச்சயம் அந்த அணியால் பல முன்னணி அணிகளுக்கும் சவாலாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.