எனது அறிமுகம் இப்படி இருக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை - திலக் வர்மா!

Updated: Tue, Aug 22 2023 19:40 IST
Image Source: Google

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் திலக் வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது 20 வயதான திலக் வர்மா, அண்மையில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அதில் ஒரு அரை சதம் உட்பட 173 ரன்கள் சேர்த்தார். இதில் 2 முறை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்துள்ளார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவரை ஒருநாள் உலக கோப்பை தொடருக்கான அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலரும் கூறி வந்தனர்.

இந்நிலையில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்து அசத்தியுள்ளார். திலக் வர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது குறித்து பேசிய தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், “வெஸ்ட் இண்டீஸில் திலக் வர்மாவிடம் செயல்திறனை மட்டும் நாங்கள் பார்க்கவில்லை, சிறந்த மனோபாவத்துடன் நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் செயல்பட்டார். இதுவே அவரை, ஒருநாள் கிரிக்கெட் போட்டி அணியுடன் அழைத்துச் செல்லவும், திறனை மேலும் வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பையும் கொடுத்துள்ளது. மீண்டும் ஒரு இடது கை வீரர், மிகவும் நம்பிக்கைக்குரியவராக திலக் வர்மா தெரிகிறார்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் எனது ஒருநாள் கிரிக்கெட் அறிமுகம் நேரடியாக ஆசிய கோப்பை தொடரில் இருக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை என இளம் வீரர் திலக் வர்மா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய திலக் வர்மா, “எனது ஒருநாள் கிரிக்கெட் அறிமுகம் நேரடியாக ஆசிய கோப்பை தொடரில் இருக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை. இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட வேண்டுமென்ற கனவு எனக்குள் இருந்தது. ஆனால், இது மிகவும் பெரியது. அடுத்தடுத்த மாதங்களில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக வீரராக விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.

அதற்கு நான் தயாராகிக் கொண்டுள்ளேன். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் எனது மாநில அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிகம் விளையாடி உள்ளேன். அந்த நம்பிக்கையை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலும் மடைமாற்றுவேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை