என் மீது எவ்விதமான அழுத்தமும் ஏற்படுத்தவில்லை - ருதுராஜ் கெய்க்வாட்!

Updated: Sat, Mar 23 2024 11:40 IST
என் மீது எவ்விதமான அழுத்தமும் ஏற்படுத்தவில்லை - ருதுராஜ் கெய்க்வாட்! (Image Source: Google)

ருதுராஜ் கெய்க்வாட் தலமையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரை எதிர்கொண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது முதல் போட்டியிலேயே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. அதன்படி நேற்று சென்னை சேப்பாகத்திலுள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணியானது அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்களைச் சேர்த்தது. இதில் அனுஜ் ராவத் 48 ரன்களையும், தினேஷ் கார்த்திக் 38 ரன்களையும் சேர்த்தனர். சிஎஸ்கே அணி தரப்பில் முஸ்தஃபிசூர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

அதப்பின் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 18.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஸ்தஃபிசூர் ரஹ்மான் ஆட்டநாயகன் விருதை வென்றார். இதன்மூலம் நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், “போட்டியின் முதல் 2-3  தவிர எஞ்சிய ஓவர்கள் முழுமையாக கட்டுப்பாட்டில் இருந்தன. பெங்களூர் அணி 10 -15 ரன்கள் குறைவாக எடுத்திருந்தாலும், பெங்களூர் வீரர்கள் பேட்டிங்கில் சிறப்பாகவே செயல்பட்டனர். டூபிளசிஸ் மற்றும் மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை அடுத்தடுத்து கைப்பற்றியது போட்டியில் பெரும் திருப்புமுனையாக அமைந்துவிட்டது என்றே கருதுகிறேன். கேப்டன் பதவியால் என் மீது எவ்விதமான அழுத்தமும் ஏற்படுத்தவில்லை.

மற்ற உள்ளூர் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட அனுபவம் இருப்பதால் என்னால் கடினமான சூழல் ஏற்பட்டாலும் என்னாலும் அதை சரியாக கையாள முடியும் என்றே கருதுகிறேன். அதே போன்றும் தோனியுடன் என்னுடன் இருப்பதால் நான் பதட்டப்பட  தேவையே இல்லை. ரஹானே, ரச்சின் ரவீந்திரா உள்ளிட்ட அனைத்து வீரர்களும் தங்களது பங்களிப்பை மிக சரியாக செய்து கொடுத்ததன் மூலமே இந்த வெற்றி எங்களுக்கு எளிதானது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை