IRE vs NZ, 3rd T20I: அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து!
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவந்த நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நியூசிலாந்து அணி, 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியிருந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் 40 ரன்கள் எடுத்திருந்த ஸ்டிர்லிங் ஆட்டமிழக்க, கேப்டன் பால்பிர்னி 10, ஹாரி டெக்டர் 23, லோர்கர் டக்கர் 28 என ஆட்டமிழந்து வெளியேறினர்.
இருப்பினும் இறுதியில் அதிரடி காட்டிய மார்க் அதிர் 15 பந்துகளில் 4 சிக்சர், 2 பவுண்டரிகள் என 37 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இலக்கை துரத்திய நியூசிலாந்து அணியில் மார்ட்டின் கப்தில் 25, ஃபின் ஆலன் 14, தனே கிளெவர் 5 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த கிளென் பிலீப்ஸ் - டேரில் மிட்செல் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி கிளென் பிலீப்ஸ் அரைசதம் அடித்து அசத்தினார்.
மறுமுனையில் டேரில் மிட்செல் 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிளென் பிலீப்ஸ் அணிக்கு வெற்றியை வாங்கித் தந்தார்.
இதன்மூலம் 19 ஓவர்களிலேயே நியூசிலாந்து அணி இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று ஒயிட் வாஷ் செய்தது.