NZ vs SA 1st Test: தென் ஆப்பிரிக்காவை பந்தாடி நியூசிலாந்து அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 511 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 240 ரன்களையும், கேன் வில்லியம்சன் 118 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 162 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆல அவுட்டானது. இதையடுத்து 349 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சனின் அபாரமான சதத்தின் மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 179 ரன்களைச் சேர்த்ததுடன், இரண்டாவது இன்னிங்ஸில் 528 ரன்கள் முன்னிலையும் பெற்றது.
இந்நிலையில் இன்று தோடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை நியூசிலாந்து அணி தொடர்வதற்கு பதிலாக 179 ரன்களில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 529 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியில் எட்வர்ட் மூரெ ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் நெய்ல் பிராண்ட் 3 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் இணைந்த ரேனார்ட் ஆஃப் தண்டர் - சுபைர் ஹம்சா இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதன்பின் 31 ரன்கள் எடுத்த நிலையில் ரேனார்ட் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து சுபைர் ஹம்சாவும் 36 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய டேவிட் பெட்டிங்ஹாம் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பெட்டிங்ஹாம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 13 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 87 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய கீகன் பீட்டர்சன் 16 ரன்களுக்கும், ஃபோர்டுன் 11 ரன்களுக்கும், ஆலிவர் ஒரு ரன்னிலும், மோரேகி ஒரு ரன்னிலும், டேன் பேட்டர்சன் 15 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ருவான் டி ஸ்வார்ட் 34 ரன்களை எடுத்திருந்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 80 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் கைல் ஜேமிசன் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் சாண்ட்னர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 281 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.