NZW vs ENGW: முதல் டி20 போட்டியை தவறவிடும் சோஃபி டிவைன், அமெலியா கெர்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், மெக் லெனிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் முன்னேறின. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இத்தொடரைத் தொடர்ந்து இங்கிலாந்து மகளிர் அணியானது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது மார்ச் 19ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடர் ஏப்ரல் 01ஆம் தேதி முதலும் தொடங்கவுள்ளது. இதனால் இத்தொடரில் எந்த அணி சிரப்பாக செயல்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் சோஃபி டிவைன் மற்றும் ஆல் ரவுண்டர் அமெலியா கெர் ஆகியோர் பங்கேற்கமாட்டார்கள் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் சோஃபி டிவைன் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளதால் அவரால் முதல் டி20 போட்டியில் பங்கேற்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய அமெலியா கெர் குறிப்பிட்ட நேரத்தில் நியூசிலாந்து வந்தடைய முடியாத காரணத்தால் அவரும் இப்போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் சோஃபி டிவைன் மற்றும் அமெலியா கெர் இருவரும் இரண்டாவது டி20 போட்டியில் அணிக்கு திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக முதல் டி20 போட்டிக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக சூஸி பேட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து டி20 அணி: சூஸி பேட்ஸ் (கே), ஈடன் கார்சன், பெர்னாடின் பெசுய்டன்ஹவுட், இஸி கேஸ், மேடி கிரீன், ப்ரூக் ஹாலிடே, ஃபிரான் ஜோனாஸ், ஜெஸ் கெர், ரோஸ்மேரி மெய்ர், ஜார்ஜியா பிலிம்மர், ஹன்னா ரோவ், லியா தஹுஹு