CT2025: ரச்சின், ஃபெர்குசன் குறித்த அப்டேட் வழங்கிய கேரி ஸ்டீவ்!
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களின் காயம் காரண்மாக பெரும் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. முன்னதாக அணியின் வேகப்பந்து வீச்சாளர் லோக்கி ஃபெர்குசன் ஐஎல்டி20 தொடரின் போது காயமடைந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் முத்தரப்பு தொடரின் போது ஆல் ரவுண்டர் ரச்சின் ரவீந்திராவும் காயத்தை எதிர்கொண்டார். இதனால் இவர்கள் இத்தொடரில் பங்கேற்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த இருவீரர்களின் உடற்தகுதி குறித்த அப்டேட்டை அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டீவ் இன்று வழங்கியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “லாகூரில் ரச்சினுக்கு நெற்றியில் மோசமான அடி விழுந்தது தெளிவாகத் தெரிகிறது. மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், அவர் தற்போது காயத்தில் இருந்து குணமடைந்து வருகிறார். எனவே, தற்போது நாங்கள் ஹச்ஐஏவின் நெறிமுறைகளைப் பின்பற்றி வருகிறோம்.
அவருக்கு சில நாட்களாக தலைவலி இருந்தது, ஆனால் அது தற்போது குறைந்து வருகிறது, இது உண்மையிலேயே நல்ல செய்தி. இன்றிரவு அவர் முதல் முறையாக மீண்டும் தாது பயிற்சியைத் தொடங்கினார். ஆனால் அவர் விளையாடத் தகுதியானவராகக் கருதப்படுவதற்கு முன்பு மேலும் சில படிகளை கடக்க வேண்டியுள்ளது. அதனால் அவரால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட முடியுமா என்பதை இப்போது தெரிவிக்க இயலாது” என்று தெரிவித்தார்.
மேற்கொண்டு லோக்கி ஃபெர்குசன் குறித்து பேசிய அவர், “தற்போது லோக்கி ஃபெர்குசனும் தனது பயிற்சியை தொடங்க ஆரம்பித்துவிட்டார். அவர் இங்கு வந்ததிலிருந்து வலை பயிறியில் பந்து வீசி வருகிறார், அதனால் இன்றிரவு தீவிரம் சற்று அதிகமாக இருந்தது. அவர் எப்படிப் பயிற்சி செய்கிறார் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது, அடுத்த இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் அவர் விளையாடுவார் என்று நான் நிச்சயமாக எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் காயத்தில் இருந்து மீண்டுள்ளது அந்த அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவர்களால் எந்த அளவிற்கு செயல்பட முடியும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Also Read: Funding To Save Test Cricket
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி: மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), வில் யங், டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திர, கேன் வில்லியம்சன், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், டாம் லேதம், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், நாதன் ஸ்மித், மேட் ஹென்றி, லோக்கி ஃபெர்குசன், பென் சியர்ஸ், வில் ஓ'ரூர்க்