சாம்பியன்ஸ் கோப்பை 2025: ரச்சின் ரவீந்திரா சதம்; அரையிறுதியில் நியூசிலாந்து!

Updated: Mon, Feb 24 2025 22:09 IST
Image Source: Google

ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ - தன்ஸித் ஹசன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 45 ரன்களைச் சேர்த்த நிலையில், தன்ஸித் ஹசன் 24 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

அதன்பின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஒருபக்கம் சிறப்பான அட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் மறுபக்கம் களமிறங்கிய அணியின் அனுபவ வீரர்கள் மெஹிதி ஹசன் மிராஸ் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 13 ரன்களிலும், தாவ்ஹித் ஹிரிடோய் 7 ரன்னிலும், முஷ்ஃபிக்கூர் ரஹீம் 2 ரன்னிலும், மஹ்முதுல்லா 4 ரன்னிலும் என அடுத்தடுத்து அதிரடியாக விளையாடும் முயற்சியில் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் தொடர்ந்து நிதானமாக விளையாடி வந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

பின்னர் 9 பவுண்டரிகளுடன் 77 ரன்களை எடுத்திருந்த சண்டோவும் விக்கெட்டை இழக்க, வங்கதேச அணி 163 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த ஜக்கர் அலி - ரிஷாத் ஹொசைன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரிஷாத் ஹொசைன் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 26 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தை நெருங்கிய ஜக்கர் அலி 3 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 45 ரன்களில் ரன் அவுட்டாகி விக்கெட்டை இழந்தார். 

இறுதியில் தஸ்கின் அஹ்மதும் 10 ரன்களுடன் நடையைக் கட்ட, வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. நியூசிலாந்து தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மைக்கேல் பிரேஸ்வெல் 4 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ ரூர்க் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் வில் யங் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்கா, அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சனும் 5 ரன்னுடன் நடையைக் கட்டினார். 

இதனால் அந்த அணி 15 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த டெவான் கான்வே - ரச்சின் ரவீந்திர இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர். இதில் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் டெவான் கான்வே 30 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரச்சின் ரவீந்திரா தனது அரைசததை கடந்தார். 

அதன்பின் ரவீந்திராவுடன் ஜோடி சேர்ந்த டாம் லேதமும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இப்போட்டியில் அபாரமாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 4ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய டாம் லேதமும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 127 ரன்களை எட்டிய நிலையில் சதமடித்து விளையாடி வந்த ரச்சின் ரவீந்திரா 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 112 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

அவரைத்தொடர்ந்து 55 ரன்களைச் சேர்த்த கையோடு டாம் லேதமும் விக்கெட்டை இழந்தார். இறுதியில் கிளென் பிலீப்ஸ் 21 ரன்களைக் குவித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் குரூப் ஏ பிரிவில் இருந்து நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை