உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது நியூசிலாந்து!
தென் ஆப்பிரிக்க அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் நியூசிலாந்து அணி 281 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்நிலையில் 2023-25ஆம் ஆண்டிற்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புதுப்பிக்கப்பட்ட புள்ளிப்பட்டியளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதன் மூலம் நியூசிலாந்து அணி 66.66 சதவீத புள்ளிகளைப் பெற்று இப்பட்டியலின் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
அதேசமயம் இப்பட்டியளின் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி 55 சதவீத புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கும், இந்திய அணி 52.77 சதவீத புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளன. மேலும் வங்கதேசம் 50 சதவீத புள்ளிகளுடன் 4ஆம் இடத்திலும், பாகிஸ்தான் 36.66 சதவீத புள்ளிகளுடன் 5ஆம் இடத்திலும், தென் ஆப்பிரிக்க அணி 33.33 சதவீத புள்ளிகளுடன் பட்டியலின் 6ஆம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளன.
ஏற்கெனவே நியூசிலாந்து அணி முதல் உலக டெஸ்ட் சாம்பியஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் தற்போது அந்த அணி 2023 -25ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கும் முன்னேறி மீண்டும் ஒருமுறை இறுதிப்போட்டியில் விளையாடும் முயற்சியில் இடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.