சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் நெய்ல் வாக்னர்!

Updated: Tue, Feb 27 2024 13:23 IST
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் நெய்ல் வாக்னர்! (Image Source: Google)

ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் பிப்ரவரி 29ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

இத்தொடருக்கான இரு அணியும் அறிவிக்கப்பட்டு, தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இத்தொடருக்கான நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் நெய்ல் வாக்னர் அணியில் இடம்பெறாமல் இருந்தார். ஆனால் அதற்கான காரணங்கள் ஏதும் கூறப்படவில்லை. இந்நிலையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் நெய்ல் வாக்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர்,  “எனது இந்த ஓய்வு முடிவு எளிதானது அல்ல. அது உணர்ச்சிமிக்கது. ஆனால் முன்னேற இதுவே சரியான நேரம். நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு தருணத்தையும் நான் ரசித்துள்ளேன். மேலும் ஒரு அணியாக எங்களால் சாதிக்க முடிந்த அனைத்திலும் பெருமைப்படுகிறேன். எனது வாழ்க்கையில் கட்டமைக்கப்பட்ட நட்பு மற்றும் பிணைப்புகளை நான் மிகவும் மதிக்கிறேன். இன்று நான் இருக்கும் இடத்தில் பங்கு வகித்த அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

நியூசிலாந்து அணிக்காக கடந்த 2012ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான நெய்ல் வாக்னர் இதுவரை 64 டெஸ்ட் போட்டிகளில் 260 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 9 முறை ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். நியூசிலாந்து டெஸ்ட் அணியின் மிகச்சிறந்து வேகப்பந்து வீச்சாளர்களின் ஒருவராக இருந்த நெய்ல் வாக்னரின் ஓய்வு முடிவு அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை