டி20 உலகக்கோப்பை: முதல் அணியாக அரையிறுதியில் நுழைந்த நியூசிலாந்து!

Updated: Fri, Nov 04 2022 13:03 IST
New Zealand register a comfortable victory against Ireland at the Adelaide Oval
Image Source: Google

எட்டாவது சீசன் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. 'சூப்பர்-12' சுற்றில் விளையாடும் 12 அணிகள் இரண்டாக பிரிக்கப்பட்டன. சூப்பர்-12 சுற்றின் போட்டிகள் 6ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. ஆனால் இதுவரை எந்த அணியும் அரை இறுதியை உறுதி செய்யவில்லை.

குரூப்-1 பிரிவில் ஆஃப்கானிஸ்தானும், குரூப்-2 பிரிவில் நெதர்லாந்தும் வெளியேற்றப்பட்டுள்ளன. குரூப்-1 பிரிவில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. இதில் காலை 9.30 மணிக்கு அடிலெய்டில் தொடங்கிய போட்டியில் நியூசிலாந்து-அயர்லாந்து அணிகள் மோதின. நியூசிலாந்து அணி 4 ஆட்டத்தில் 2 வெற்றி, ஒரு தோல்வி பெற்றது. ஒரு ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. 5 புள்ளிகளுடன் உள்ள நியூசிலாந்து, இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரை இறுதியை உறுதி செய்து விடலாம் என்ற சூழலில் களம் இறங்கியது.

மூன்று புள்ளிகளுடன் உள்ள அயர்லாந்து அணி கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பு முடிந்து போய்விட்டது. டாஸ்  வென்ற அயர்லாந்து கேப்டன் ஆன்டி பால்பிர்னி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக பின் ஆலென், டிவான் கான்வே களம் இறங்கினர்.

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 52 ரன்கள் குவித்தது. ஃபின் ஆலன் 32 ரன்னிலும் கான்வே 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த வில்லியம்சன் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். பிலிப்ஸ் 9 பந்தில் 17 ரன்னிலும் வில்லியம்சன் 35 பந்தில் 61 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

அடுத்துவந்த நீசம், சட்னர் 0 ரன்னில் ஆட்டமிழந்தனர். மிட்செல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் விளாசினார். இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது. அயர்லாந்து தரப்பில் ஜோசுவா லிட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். 

இதையடுத்து இலக்கை துரத்திய அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் - ஆண்டி பால்பிர்னி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய இருவரும் தலா 30 ரன்களைக் கடந்து வலிமையான நிலையில் இருந்தனர். 

அதன்பின் 30 ரன்களில் பால்பிர்னி விக்கெட்டை இழக்க, மறுமுனையில் இருந்த பால் ஸ்டிர்லிங் 37 ரன்களுக்கு நடையைக் கட்டி ஏமாற்றமளித்தார். அதனைத் தொடர்ந்து வந்த லோர்கன் டக்கர், ஹாரி டெக்டார், கர்டிஸ் காம்பேர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணியால் 9 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை மட்டுமே எடுக்கமுடிந்தது. நியூசிலாந்து தரப்பில் லோக்கி ஃபர்குசன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

இதன்மூலம் நியூசிலாந்து அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி, அரையிறுதிச் சுற்றுக்கு ஒரு அடியை எடுத்துவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை