இந்திய அணியில் அடுத்த தோனி உருவாகி வருகிறார் - ஜுரெலை பாராட்டிய கவாஸ்கர்!

Updated: Sun, Feb 25 2024 13:36 IST
இந்திய அணியில் அடுத்த தோனி உருவாகி வருகிறார் - ஜுரெலை பாராட்டிய கவாஸ்கர்! (Image Source: Google)

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்களையும், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 307 ரன்களையும் சேர்த்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 46 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 

இந்நிலையில் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக சோபிக்க தவறியதால் 177 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது குல்தீப் யாதவுடன் ஜோடி சேர்ந்து விளையாடிய துருவ் ஜுரெல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார். 

அதிலும் தனது அரைசதத்திற்கு பிறகு அதிரடியாக விளையாடிய துருவ் ஜுரெல் அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், தனது முதல் சதத்தையும் நெருங்கிக்கொண்டிருந்தார். ஆனால் 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 90 ரன்களைச் சேர்த்திருந்த துருவ் ஜுரெல் விக்கெட்டை இழந்து 10 ரன்களில் தனது சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இருப்பினும் இக்கட்டான சூழலில் சிக்கியிருந்த இந்திய அணியை அபாரமாக செயல்பட்டு மீட்டெடுத்த துருவ் ஜுரெலுக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் வர்ணனை செய்துகிண்டிருந்த இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்ர், இந்திய அணியில் அடுத்த எம் எஸ் தோனி உருவாகி வருகிறார் என்று துருவ் ஜுரெலை பாராட்டியுள்ளார்.

 

இதுகுறித்து பேசிய அவர், “கிரிக்கெட் பற்றிய துருவ் ஜுரெல்லின் அணுகுமுறையும், ஆட்டத்தின் போக்கை கணித்து ஷாட்களை விளையாடுவதும் ஆச்சரியமாக உள்ளது. துருவ் ஜுரெல்லை பார்க்கும் போது அடுத்த எம்எஸ் தோனி உருவாகுவதை போல் தோன்றுவதாக” துருவ் ஜுரெலை பாராட்டியுள்ளார். மேலும் துருவ் ஜுரெல் மகேந்திர சிங் தோனியின் மிகப்பெரும் ரசிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இப்போட்டிக்கு முன்னதாக பேசிய ஜுரெல். “ஒரு சர்வதேச போட்டிக்குப் பிறகு எம்எஸ் தோனியை சந்திக்க வேண்டும் என்பது என் கனவு. நான் அவருடன் பேசும்போதெல்லாம் அவரிடம் இருந்து புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்கிறேன். ராஞ்சியில் நடக்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை