பட்லர், சூர்யா, மேக்ஸ்வெல் ஆகியோரின் சிக்ஸர் சாதனையை தகர்த்த நிக்கோலஸ் பூரன்!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது டிரினிடாட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியானது டிரிஸ்டன் ஸ்டப்ஸ், பேட்ரிக் க்ரூகர் ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 174 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 76 ரன்களையும், பேட்ரிக் க்ரூகர் 44 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் மேத்யூ ஃபோர்ட் 3 விக்கெட்டுகளையும், ஷமார் ஜோசப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் அலிக் அதானாஸ் 40 ரன்களிலும், அரைசதம் கடந்து அசத்திய ஷாய் ஹோப் 51 ரன்களையும் சேர்த்து நிலையில் விக்கெட்டை இழந்துனர்.
அதேசமயம் மறுபக்கம் அபாரமாக விளையாடி அரைசதம் கடந்த நிக்கோலஸ் பூரன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் 65 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 17.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் நிக்கோலஸ் பூரன் 7 சிக்ஸர்களை விளாசி மிரட்டினார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை விளாசிய மூன்றாவது வீரர் எனும் பெருமையை நிக்கோலஸ் பூரன் பெற்றுள்ளார். இதற்கு முன் 6ஆவது இடத்தில் இருந்த நிக்கோலஸ் பூரன், தனக்கு முன் இருந்த கிளென் மேக்ஸ்வெல், சூர்யகுமார் யாதவ், ஜோஸ் பட்லர் ஆகியோரை பின்னுக்கு தள்ளி தற்போது 139 சிக்ஸர்களுடன் 3ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 205 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்
- ரோஹித் சர்மா (இந்தியா) - 205 சிக்ஸர்கள்
- மார்ட்டின் கப்தில் (நியூசிலாந்து) - 173 சிக்ஸர்கள்
- நிக்கோலஸ் பூரன், (வெஸ்ட் இண்டீஸ்) - 139 சிக்ஸர்கள்*
- ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து) - 137 சிக்ஸர்கள்
- சூர்யகுமார் யாதவ் (இந்தியா) - 136 சிக்ஸர்கள்