ஐபிஎல் தொடரில் சாதனைகளை குவித்த நிக்கோலஸ் பூரன்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றிஎற்று அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடிய நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் என 70 ரன்களைச் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் இப்போட்டியில் அவர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.
பொல்லார்ட், டிராவிஸ் ஹெட் சாதனை முறியடிப்பு
இப்போட்டியில் நிக்கோலஸ் பூரன் 18 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் 20க்கும் குறைவான பந்துகளில் அதிக முறை அரைசதம் கடந்த வீரர்கள் பட்டியலில் நிக்கோலஸ் பூரன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். முன்னதாக டிராவிஸ் ஹெட், கீரென் பொல்லார்ட் தலா 4 முறை அரைசதம் கடந்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது நிக்கோலஸ் பூரன் 5ஆவது முறையாக அரைசதம் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல்லில் அதிக அரைசதம் (20க்கும் குறைவான பந்துகளில்)
- 5 - நிக்கோலஸ் பூரன்
- 4 - டிராவிஸ் ஹெட்
- 4 - கீரோன் போலார்டு
- 3 - ஃப்ரேசர் மெக்கர்க்
- 2 - அபிஷேக் சர்மா
- 2 - இஷான் கிஷான்
- 2 - கேஎல் ராகுல்
பொல்லார்ட் சாதனை சமன்
இப்போட்டியில் நிக்கோலஸ் பூரன் 250+ என்ற ஸ்டிரைக் ரேட்டில் 70 ரன்களைக் குவித்திருந்தார். இதன்மூலம், ஐபிஎல் தொடர் வரலாற்றுல் 250+ ஸ்டிரைக் ரேட்டில் அதிக முறை அரைசதம் கடந்த வீரர்கள் பட்டியலில் நிக்கோலஸ் பூரன் கூட்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளார். முன்னதாக கீரன் பொல்லார்ட் தலா 4 முறை 250+ என்ற ஸ்டிரைக் ரேட்டில் அரைசதம் அடந்த நிலையில், தற்போது நிக்கோலஸ் பூரனும் 4 முறை இதனை செய்து சாதனையை சமன்செய்துள்ளார்.
ஐபிஎல்லில் அதிக முறை 50+ ஸ்கோர் (250+ SR)
- 4 முறை - நிக்கோலஸ் பூரன்
- 4 முறை - கீரான் போலார்டு
- 3 முறை - ஜே ஃப்ரேசர்-மெக்கர்க்
- 3 முறை - டிராவிஸ் ஹெட்
- 2 முறை - ஏபி டெவிலியர்ஸ்
- 2 முறை - ஆண்ட்ரே ரஸ்ஸல்
இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். அந்த அணியில் டிராவிஸ் ஹெட்47 ரன்களையும், அனிகெத் வர்மா 36 ரன்களையும், நிதீஷ் ரெட்டி 32 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களைச் சேர்த்தது. லக்னோ அணி தரப்பில் ஷர்தூல் தாக்கூர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Also Read: Funding To Save Test Cricket
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்திய நிக்கோலஸ் பூரன் 70 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 52 ரன்களையும் சேர்த்த கையோடு விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அப்துல் சமத் 22 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.