இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று சட்டோகிராமில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் - சௌமியா சர்க்கார் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் லிட்டன் தாஸ் ரன்கள் ஏதுமின்று விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த சௌமியா சர்க்கார் - கேப்டன் நஜ்முல் ஹொசைன் சண்டோ இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் பொறுப்பாக விளையாடி வந்த சௌமியா சர்க்கார் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

Advertisement

அதேசமயம் மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நஜ்முல் ஹொசைன் 40 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 68 ரன்களில் சௌமியா சர்காரும், மஹ்முதுல்லா ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த தாவ்ஹித் ஹிரிடோய் - முஷ்பிக்கூர் ரஹிம் இணை ஓரளவு தாக்குபிடித்து ஸ்கோரை உயர்த்தினர். பின் முஷ்ஃபிக்கூர் 25 ரன்களுக்கும், மெஹிதி ஹசன் 12 ரன்களுக்கும், தன்ஸிம் ஹசன் 18 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.

அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தாவ்ஹித் ஹிரிடோய் 3 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 96 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய தஸ்கின் அஹ்மத் தனது பங்கிற்கு 18 ரன்களையும் சேர்த்தார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 286 ரன்களைச் சேர்த்தது. இலங்கை தரப்பில் வநிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.  

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணியில் அவிஷ்கா ஃபெர்னாண்டொ ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் குசால் மெண்டிஸ் 16 ரன்களுக்கும், சதீரா சமரவிக்ரமா ஒரு ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இலங்கை அணி 43 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அதன்பின் இணைந்த பதும் நிஷங்கா - சரித் அசலங்கா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். மேலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பதும் நிஷங்கா தனது சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். 

Advertisement

அதன்பின் 13 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 114 ரன்கள் எடுத்த நிலையில் பதும் நிஷங்கா விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சரித் அசலங்கா 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 91 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் களமிறங்கிய ஜனித் லியானகே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டுகளை இழந்தனர்.

பின்னர் களமிறங்கிய வநிந்து ஹசரங்கா ஒரு பவுண்டரி, 2 சிக்சர்கள் என 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த துனித் வெல்லலாகே 15 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இலங்கை அணி 47.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி, 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளது.  

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News