ஐபிஎல் 2025: முழு உடற்தகுதியை எட்டிய நிதீஷ் ரெட்டி!
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
அதனைத்தொடர்ந்து, இத்தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் கடந்த ஐபிஎல் சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறி கோப்பையை நழுவவிட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களுடைய முதல் லீக் போட்டியில் ராஜஸ்தான ராயல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரசிகர்களை மகிழ்விக்கும் செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி அந்த அணியின் நட்சதிர ஆல் ரவுண்டர் நிதீஷ் ரெட்டி காயத்தில் இருந்து மீண்டு முழு உடற்தகுதியை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர்த்து அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடத்தப்பட்ட உடற்தகுதி தேர்விலும் சிறப்பாக செயல்பட்டுள்ளதாகவும், இதனால் இந்த ஐபிஎல் தொடரில் அவர் விளையாடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக 21 வயதான நிதிஷ் குமார் ரெட்டி சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் தொடருக்கு முன்னர் பயிற்சியின் போது அவர் காயத்தை சந்தித்தன் காரணமாக இந்த டி20 தொடரில் இருந்து விலகினார். இந்நிலையில் அவர் மீண்டும் உடற்தகுதியை பெற்றிருப்பது சன்ரைசர்ஸ் அணி ரசிகர்களை மட்டுமின்றி, இந்திய ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏனெனில் கடந்த ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதீஷ் ரெட்டிக்கு இந்திய அணியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி இந்திய அணிக்காக இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதத்துடன் 298 ரன்களையும், 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேற்கொண்டு டி20 தொடரில் 4 போட்டிகளில் ஒரு அரைசதத்துடன் 90 ரன்களையும், 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் ரெட்டி, இஷான் கிஷன், முகமது ஷமி, ஹர்சல் படேல், ராகுல் சாஹர், ஆடம் ஜம்பா, அதர்வா டைடே, அபினவ் மனோகர், சிமர்ஜீத் சிங், ஜீஷன் அன்சாரி, ஜெய்தேவ் உனத்கட், வியான் முல்டர்*, கமிந்து மெண்டிஸ், அனிகேத் வர்மா, ஈஷான் மலிங்கா, சச்சின் பேபி.