யுவராஜ் சிங்கிற்கு பிறகு நான்காம் இடத்தில் களமிறங்க நிலையான பேட்டர் இல்லை - ரோஹித் சர்மா!
உலகக்கோப்பைத் தொடருக்கு இன்னும் 2 மாதங்கள் கூட இல்லாத நிலையில், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யார் என்பதில் தெளிவில்லாமல் இருக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்கு முன்பாகவும் நம்பர் 4 வரிசையில் யார் களமிறங்குவார்கள் என்ற கேள்விக்கு, கடைசி வரை இந்திய அணி விடைதெரியாமல் இருந்தது. அதேபோல் ஆட்டத்தை தான் மீண்டும் பிசிசிஐ விளையாடி வருகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அளித்துள்ள நேர்காணலில், “நம்பர் 4 பேட்ஸ்மேன் யார் என்பதில் இந்திய அணிக்கு நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. யுவராஜ் சிஙகிற்கு பின் எந்த வீரரும் நம்பர் 4 வீரராக செட்டிலாகவில்லை. நீண்ட காலத்திற்கு பின் அந்த இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக செயல்பட்டார். 20 போட்டிகளில் 805 ரன்களை விளாசி இருக்கிறார். ஆனால் தற்போது வீரர்களின் காயம் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 4 முதல் 5 ஆண்டுகளாக இதுதான் நிலைமையாக உள்ளது. ஏராளமான வீரர்கள் காயமடையும் போது, புதிய வீரர்கள் அந்த இடத்தில் விளையாட வேண்டிய நிலை ஏற்படுகிறது. நான் கேப்டனாக இல்லாத போது கூட நம்பர் 4 பேட்ஸ்மேன்களை கவனித்து வந்திருக்கிறேன். நிறைய வீரர்கள் வருவதும் போவதுமாகவே இருக்கிறார்கள். சில நேரங்களில் காயமடைகிறார்கள் அல்லது ஃபார்மில்லாமல் அணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.
உலகக்கோப்பைத் தொடரை பொறுத்தவரை நான் உட்பட யாருமே நேரடியாக தேர்வு செய்யப்பட போவதில்லை. இந்திய அணியில் யாருக்கும் நிரந்தர இடமில்லை. சில வீரர்கள் நிச்சயம் விளையாடப் போகிறார்காள் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர் சில வீரர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது. அதேபோல் ஆசியக் கோப்பைத் தொடரிலும் சிறந்த அணிகளை எதிர்கொள்ளப் போகிறோம். அதனால் அதிலும் இளம் வீரர்களின் செயல்பாடுகள் கூர்ந்து கவனிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.