உலகக் கோப்பை அணிக்கு தேர்வாவது எனது கையில் கிடையாது - மார்னஸ் லபுஷாக்னே!
தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்றுநடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. டேவிட் வார்னர் மற்றும் மார்னஸ் லபுஷாக்னேவின் அசத்தலான சதங்களால் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 392 ரன்கள் குவித்தன.
அடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா 41.5 ஓவர்களில் 269 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகளையும், ஆரோன் ஹார்டி, நாதன் எல்லீஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அண் 123 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகளில் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது ஆஸ்திரேலிய அணி.
இப்போட்டியில் சதமடித்த மார்னஸ் லபுஷாக்னே ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரின் போது ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் காயமடைய, அவருக்கு பதிலாக கன்கஷன் சப்ஸ்டிடியூட் முறையில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடர்ந்தவர் மார்னஸ் லபுஷாக்னே. அப்போட்டியில் அற்புதமாக விளையாட, அவருக்கு அந்தத் தொடர் முழுக்க வாய்ப்பு கிடைத்து, ஆஸ்திரேலியா அணியின் ஒரு அங்கமாக மாறினார்.
இதேபோல் சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஆஸ்திரேலியா அணியில் அவருக்கு இடம் அளிக்கப்படவில்லை. இதற்கு முன்பாகவே அவருக்கு உலகக் கோப்பை அணியில் இடம் இல்லை என்பது அவருக்கு தெரிவிக்கப்பட்ட விஷயமாகவே இருந்தது. இந்த நிலையில் திடீர் என்று ஸ்மித் காயம் அடைய இவருக்கு தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இடம் கிடைக்கிறது. ஆனாலும் இவருக்கு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் அணியில் இடம் கிடைக்கவில்லை.
அந்தப் போட்டியில் கேமரூன் கிரீன் பந்து ஹெல்மெட்டில் தாக்கி காயம் அடைய, அவருக்கு மாற்றாக விளையாட இவருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. கிடைத்த வாய்ப்பில் வந்து அரை சதம் அடித்தவர், அணியை வெல்ல வைத்து ஆட்டநாயகன் விருது வென்றார். இதற்கடுத்து நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 99 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து அசத்தி இரண்டாவது ஆட்டநாயகன் விருதை தற்போது பெற்றிருக்கிறார். எனவே இவரை உலகக் கோப்பை ஆஸ்திரேலியா அணியில் சேர்க்க வேண்டும் என்ற பேச்சு உருவாகி இருக்கிறது.
இதுகுறித்து பேசி உள்ள மார்னஸ் லபுஷாக்னே, “இப்படி ரன்களை எடுத்து அணி வெற்றி பெறுவது எப்பொழுதும் நல்ல விஷயமாக இருக்கிறது. ஆனாலும் என்னால் இந்த போட்டியில் இன்னும் ஒரு 30 ரன்கள் எடுத்திருக்க முடியும். இருந்தாலும் நீங்கள் திருப்தியாக இருக்க வேண்டும். என்னுடைய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் மின்னல் வேகத் தொடக்கத்தை பெற்றார்கள். நாங்கள் விக்கெட்டை இழந்தாலும் கூட அதனால் எழுந்தோம்.
உலகக் கோப்பை அணிக்கு தேர்வாவது எனது கையில் கிடையாது. என்னுடைய கிரிக்கெட்டை விளையாடுவது மட்டும்தான் என்னுடைய வேலை. உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்தால் போய் உலகக் கோப்பையில் விளையாடுவேன். இல்லையென்றால் வீட்டிற்கு சென்று மகளைப் பார்ப்பேன். அவ்வளவுதான்” என்று கூறியிருக்கிறார்.