இவர் தான் எனது ஃபேவரைட் கிரிக்கெட்டர்; ஆனால் அது சச்சின், கங்குலி இல்லை - ஹர்திக் பாண்டியா!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா. வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, அணிக்கு வந்த புதிதில் கபில் தேவுடன் ஒப்பிடப்பட்டவர். ஆனால் தொடர் காயங்கள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஃபிட்னெஸ் இல்லாததால் இந்திய அணியில் தனக்கான இடத்தை இழந்தார் பாண்டியா.
ஃபிட்னெஸில் கடுமையாக கவனம் செலுத்தி, காயங்களிலிருந்து மீண்டு முழு ஃபிட்னெஸுடன் ஐபிஎல் 15வது சீசனில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்தினார். இந்த சீசனில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் மட்டுமல்லாது, கேப்டன்சியிலும் அபாரமாக செயல்பட்டு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்தார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய டி20 அணியில் ஹர்திக் பாண்டியா இடம்பெற்றுள்ளார். ஒரு ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியாவின் இணைவு இந்திய அணிக்கு வலுசேர்க்கும். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்காக அசத்தும் முனைப்பில் தீவிர பயிற்சி செய்துவருகிறார் பாண்டியா.
இந்நிலையில், தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். 1980-90களில் பிறந்து வளர்ந்தவர்கள் பெரும்பாலும், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சௌரவ் கங்குலி, பிரயன் லாரா, ஷேன் வார்ன், ரிக்கி பாண்டிங், வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், தோனி ஆகிய வீரர்களின் ரசிகர்களாகவே இருப்பார்கள்.
ஆனால் ஹர்திக் பாண்டியாவோ, மேற்கூறிய ஜாம்பவான்கள் எவரது ரசிகரும் இல்லையாம். அவர் இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் தொடக்க வீரரும், உள்நாட்டு கிரிக்கெட்டின் ஜாம்பவானுமான வாசிம் ஜாஃபரின் ரசிகராம்.
இதுகுறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, “எனக்கு ஜாக் காலிஸ், விராட், சச்சின் சார் ஆகியோரை பிடிக்கும். நிறைய சிறந்த வீரர்கள் உள்ளனர். ஆனால் என்னுடைய ஃபேவரைட் கிரிக்கெட்டர் வாசிம் ஜாஃபர் தான். வாசிம் ஜாஃபர் பேட்டிங் ஆடுவதை பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும். அனைத்து லெஜண்ட் கிரிக்கெட்டர்களுக்கும் மேலாக நான் ஜாஃபரைத்தான் வைப்பேன். அவரது பேட்டிங்கை காப்பி அடிக்க நினைத்திருக்கிறேன். ஆனால் அவரது கிளாஸான பேட்டிங்கை என்னால் காப்பியடிக்க முடியவில்லை” என்று தெரிவித்தார்.
2000ஆம் ஆண்டிலிருந்து 2008ஆம் ஆண்டுவரை இந்தியாவிற்காக 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1944 ரன்கள் அடித்துள்ள வாசிம் ஜாஃபர், 260 முதல் தர போட்டிகளில் ஆடி 19,410 ரன்களை குவித்துள்ளார் ஜாஃபர்.