சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாட் கம்மின்ஸ் விளையாடுவாரா? - ஜார்ஜ் பெய்லி பதில்!
பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் வென்று அசத்தியதுடன், நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
இதனையடுத்து, ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடர் ஜனவரி 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்றைய தினம் அறிவித்துள்ளது. இதில் வழக்கமான கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இத்தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படவுள்ளார். இந்நிலையில் தனது குழந்தை பிறப்பின் காரணமாக இத்தொடரில் இருந்து விலகி இருக்கும் பாட் கம்மின்ஸ் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேற்கொண்டு இந்திய அணிக்கு எதிரான தொடரின் போது கம்மின்ஸ் காயத்தை சந்தித்துள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் தேர்வுகுழு தலைவர் ஜார்ஜ் பெய்லி, “பாட் கம்மின்ஸ் அடுத்த சில நாள்கள் குழந்தை பிறப்பிற்கான விடுப்பில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும் அவரது கணுக்காலிலும் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த வாரம் அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளபடவுள்ளது. அதன் முடிவில் அவரது காயம் எவ்வாறு உள்ளது என்பது குறித்த தகவல்கள் எங்களுக்கு கிடைக்கும்.
இதனால் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாட் காம்மின்ஸ் விளையாடுவாரா என்பது உறுதியாக தெரியவில்லை. அவருடைய ஸ்கேன் முடிவுகளையும் அவர் எவ்வாறு முன்னேறுகிறார் என்பதையும் நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இருப்பினும் அவர் கூடியவிரையில் குணமடைவார் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக ஜோஷ் ஹேசில்வுட்டும் காயம் காரணமாக இலங்கை தொடரில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், சீன் அபோட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கன்னொலி, ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ், மேத்யூ குஹ்னெமன், மார்னஸ் லபுஷாக்னே, நாதன் லையன், நாதன் மெக்ஸ்வீனி, டாட் மர்ஃபி, மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.