NZ vs AUS, 2nd T20I: முதல் ஓவரில் இருந்தே அதிரடி காட்டிய ஆஸி; விக்கெட்டுகளை வீழ்த்தி முட்டுக்கட்டைப் போட்ட நியூசி!

Updated: Fri, Feb 23 2024 13:26 IST
NZ vs AUS, 2nd T20I: முதல் ஓவரில் இருந்தே அதிரடி காட்டிய ஆஸி; விக்கெட்டுகளை வீழ்த்தி முட்டுக்கட்டைப் (Image Source: Google)

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையெயான இரண்டாவது டி20 போட்டி ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் - ஸ்டீவ் ஸ்மித் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிராவிஸ் ஹெட் முதல் ஓவரிலிருந்தே பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசி அதிரடி காட்டினார். மறுப்பக்கம் ஸ்டீவ் ஸ்மித்தும் தனது பங்கிற்கு ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என விளாசினார். அதன்பின் ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை வீசிய லோக்கி ஃபெர்குசன் முதல் பந்திலேயே 11 ரன்கள் எடுத்திருந்த ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்தினார்.

அதன்பின் டிராவிஸ் ஹெட்டுடன் இணைந்த கேப்டன் மிட்செல் மார்ஷும் அதிரடியாக விளையாடினார். இதில் தொடந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 பவுண்டரி, 5 சிச்கர்கள் என 45 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வல் 6 ரன்களுக்கும், மிட்செல் மார்ஷ் 26 ரன்களுக்கும், ஜோஷ் இங்கிலிஸ் 5 ரன்களுக்கும், மேத்யூ வேட் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

பின்னர் ஜோடி சேர்ந்த டிம் டேவிட் மற்றும் பாட் கம்மின்ஸ் இணை ஓரளவு தாக்குப்பிடிக்க ஆஸ்திரேலிய அணியும் சவாலான ஸ்கோரை நோக்கி நகர்ந்தது. பின் 17 ரன்கள் எடுத்திருந்த டிம் டேவிட்டும் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட பாட் கம்மின்ஸும் 22 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஸாம்பா, ஹசில்வுட் ஆகியோரும் லோக்கி ஃபெர்குசன் வேகத்தில் வீழ்ந்தனர்.

இதனால் 19.5 ஓவர்களிலேயே ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய லோக்கி ஃபெர்குசன் 4 விக்கெட்டுகளையும், பென் சியர்ஸ், மிட்செல் சாண்ட்னர், ஆடம் மில்னே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை