NZ vs BAN, 1st Test: 458 ரன்னில் வங்கதேசம் ஆல் அவுட்; நியூசிலாந்து தடுமாற்றம்!
நியூசிலாந்து - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பே ஓவலில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த வங்கதேச அணி 328 ரன்களில் நியூசிலாந்தை கட்டுப்படுத்தியது. நியூசிலாந்து அணி தரப்பில் டேவன் கான்வே 122 ரன்களைச் சேர்த்தார்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணி 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட்டுகளை இழந்து 401 ரன்களைக் குவித்தது.
இதையடுத்து 73 ரன்கள் முன்னிலையுடன் இன்று 4ஆம் நாள் ஆட்டத்தை தொடரர்ந்த வங்கதேச அணியில் யாசிர் அலி 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மெஹதி ஹசனும் 47 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 458 ரன்களில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணி தரப்பில் ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும், நெய்ல் வாக்னர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 130 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் கேப்டன் டாம் லேதம் 14, டேவன் கான்வே 13 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த வில் யங் - ராஸ் டெய்லர் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியது. இதில் வில் யங் அரைசதம் கடந்தார்.
பின் 69 ரன்கள் எடுத்திருந்த வில் யங் ஆட்டமிழக்க, அடுத்து வந்த நிக்கோலஸ், டாம் பிளண்டல் ஆகியோர் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். இருப்பினும் நியூசிலாந்து அணி முன்னிலைப் பெற்றது.
இதனால் 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களைச் சேர்த்துள்ளது. நியூசிலாந்து அணியில் ராஸ் டெய்லர் 37 ரன்களுடனும், ரச்சின் ரவீந்திர 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேச அணி தரப்பில் எப்டாட் ஹொசைன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் 17 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து அணி நாளை 5ஆம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.