NZ vs BAN, 1st Test: நிதானத்தைக் கடைப்பிடிக்கும் வங்கதேசம்!

நியூசிலாந்து, வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் நேற்று (சனிக்கிழமை) பே ஓவல் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதன்படி முதல் பேட்டிங்கை தொடங்கிய நியூசிலாந்து, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. ஹென்ரி நிகோல்ஸ் ஆட்டமிழக்காமல் 32 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்த நிலையில், 2ஆம் நாள் ஆட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. டெயிலண்டர்கள் பெரிதளவில் பங்களிக்காமல் ஒற்றை இலக்கு ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நிகோல்ஸ் மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதனால், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 300-ஐ தாண்டியது.
75 ரன்கள் சேர்த்த நிகோல்ஸ் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். 108.1 ஓவர்களில் நியூசிலாந்து அணி 328 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்கதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஷொரிஃபுல் இஸ்லாம் மற்றும் மெஹதி ஹாசன் தலா 3 விக்கெட்டுகளையும், மொமினுல் ஹக் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அதன்பிறகு, வங்கதேசம் முதல் இன்னிங்ஸை தொடங்கியது. ஷத்மான் இஸ்லாமும், மஹமதுல் ஹசன் ஜாயும் நிதான தொடக்கத்தையே தந்தனர். இஸ்லாம் 22 ரன்கள் எடுத்த நிலையில், நீல் வாக்னர் வேகத்தில் அவரிடமே கேட்ச் ஆனார்.
எனினும், ஜாய் தொடர்ந்து நிதானம் காட்டி விளையாடினார். புதிதாகக் களமிறங்கிய நஜ்முல் ஹொசைன் ஷன்டோவும் அவருக்கு ஒத்துழைப்பு தந்து விளையாடினார். இதனால் இருவரும் அரைசதம் கடந்தனர்.
பின் 64 ரன்கள் சேர்த்திருந்த ஹொசைன் ஷண்டோ வாக்னர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதனால் 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 2 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களைச் சேர்த்துள்ளது.
இதில் முகமதுல் ஹசன் 70 ரன்களுடனும், கேப்டன் மொமினுல் ஹக் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதையடுத்து 153 ரன்கள் பின் தங்கிய நிலையில் வங்கதேச அணி நாளை 3ஆம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.