NZ vs BAN, 3rd ODI: நியூசிலாந்தை வீழ்த்தி வங்கதேச அணி வரலாற்று வெற்றி!

Updated: Sat, Dec 23 2023 11:17 IST
Image Source: Google

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நேபியரில் உள்ள  மெக்லீன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் - ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரவீந்திரா 8 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஹென்றி நிக்கோலஸும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதனைத்தொடர்ந்து சிறிது தாக்குப்பிடித்த கேப்டன் டாம் லேதம் 21 ர்னகளுக்கும், மற்றொரு தொடக்க வீரர் வில் யங் 26 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

இதையடுத்து களமிறங்கிய டாம் பிளண்டல், மார்க் சாப்மேன், ஜோஷ் சார்க்சன், ஆடம் மில்னே என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் நியூசிலாந்து அணி 31.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 98 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஷொரிஃபுல் ஹசன், தன்ஸிம் ஹசன், சௌமியா சர்க்கார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர்.

அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணிக்கு சௌமியா சர்க்கார் - அனாமுல் ஹக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சௌமியா சர்க்கார் 4 ரன்களில் காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 

இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனாமுல் ஹக் 37 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நஜ்முல் ஹொசைன் சாண்டோ அரைசதம் கடந்ததுடன் 51 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் வங்கதேச அணி 15.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

இருப்பினும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட தன்ஸிம் ஹசன் ஷாகிப் ஆட்டநாயகனாகவும், வில் யங் தொடர்நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை